’சபாநாயகர் பதவி பாஜகவிடம் சென்றால் குதிரைபேரம் நடக்கும்’..!! காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் எச்சரிக்கை..!!
மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றுள்ளார். 18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டம் ஜூன் 24ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 24, 25 ஆகிய தினங்களில் புதிய எம்பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும். இதற்காக இடைக்கால சபாநாயகரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமிப்பார்.
பின்னர் ஜூன் 26ஆம் தேதி லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடைபெறும். லோக்சபா சபாநாயகர் பதவியைப் பெறுவதில் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் தீவிரமாக உள்ளது. ஆனால் பாஜக, லோக்சபா சபாநாயகர் பதவியை அவ்வளவு எளிதாக விட்டுத் தராது என்று சொல்லப்படுகிறது. லோக்சபா சபாநாயகர் பதவிக்கு ஆந்திரா பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி (என்டி ராமாராவ் மகள் – சந்திரபாபு நாயுடு மனைவியின் சகோதரி), முன்னாள் சபாநாயகர் ஜிஎம்சி பாலயோகியின் மகன் ஹரிஸ் மாதூர் உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுகின்றன.
இந்நிலையில் தான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசோக் கெலாட் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சபாநாயகர் பதவியை பாஜக வைத்துக்கொள்ளும் பட்சத்தில் தங்கள் எம்.பி.க்கள் விலைபேசப்படுவதை தெலுங்கு தேசமும் ஐக்கிய ஜனதா தளமும் பார்க்க வேண்டியிருக்கும் என அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
பல மாநில சட்டப்பேரவைகளில் சபாநாயகரின் முடிவால் அரசுகள் கவிழ்ந்து கட்சிகள் உடைந்ததையும் இந்த இரு கட்சிகளும் உணர வேண்டும் என்றும் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஜனநாயக விரோத செயல்கள் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால், சபாநாயகர் பதவி இரு கூட்டணி கட்சிகளில் ஒன்றிற்கு தரப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு முன் கூட்டணி அரசுகள் அமைந்தபோது தெலுங்குதேசம், சிவசேனா, மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு சபாநாயகர் பதவி ஒதுக்கப்பட்டதையும் அசோக் கெலாட் சுட்டிக்காட்டியுள்ளார்.
Read More : இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் தெரியுமா..? சரித்திரம் படைத்த கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர்..!!