தடையை மீறி மீனவர்கள் கடலுக்குச் சென்றால் நலத்திட்ட உதவிகள் ரத்து..!! - புதுச்சேரி அரசு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக, 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படிபுதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீனவர்கள் தடையை மீறி கடலுக்குச் சென்றால் நலத்திட்ட உதவிகள் ரத்து செய்யப்படும் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில்அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடற்கரை பகுதிகளில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே கடலுக்குச் சென்றவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் புதுவையில் அனைத்து படகுகளும் பாதுகாப்புடன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரியில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் கடற்கரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை போலீசார் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை செய்து அங்கிருந்து வெளியேற்றினர். தொடர்ந்து கடலில் யாரும் இறங்காதவாறு போலீசார் ரோந்து பணியில் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் புதுச்சேரிக்கு வந்து சில சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் ஒரு சிலர் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றிருப்பதாக மீன்வளத் துறைக்கு புகார் வந்தது. அவர்களும் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப் பட்டுள்ளனர். தடையை மீறி கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Read more ; நைஜீரியாவில் சோகம்.. பெட்ரோல் டேங்கர் வெடித்ததில் 94 பேர் பலி..!! 50க்கும் மேற்பட்டோர் காயம்