”மத்திய அரசு இதை மட்டும் செய்துவிட்டால் தங்கம் விலை மேலும் உயரும்”..!! ஆனந்த் சீனிவாசன் எச்சரிக்கை..!!
தங்கம் விலை உயர்வுக்கான காரணத்தை பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ”அமெரிக்காவில் இப்போது கடன் பத்திரம் வெகுவாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடன் பத்திர வட்டி உயர்ந்துள்ளது. அதாவது, அமெரிக்காவில் பணவீக்கம் வரும். இதனால், வட்டி விகிதம் வேகமாகக் குறையாது என்ற தகவல் அங்கு வேகமாகப் பரவிவிட்டது.
இது ஒரு பக்கம் இருக்க.. நமது இந்திய ரிசர்வ் வங்கி தங்கமாக வாங்கி குவித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் டேட்டாவின் உலகிலேயே தங்கத்தை அதிகம் வாங்கி குவித்த நாடுகளில் இந்தியா 2-வது நாடாக உள்ளது. ஆனால், இங்கு விஷயம் என்னவென்றால் நம்மை விட அதிகமாகச் சீனா தங்கத்தை வாங்கி குவிக்கிறது. சர்வதேச சந்தையில் இருந்து தங்கத்தை அதிகம் வாங்கி குவிக்கும் நாடாகச் சீனா உள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரியளவில் குறைய வாய்ப்பில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில், "அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதே டிரெண்ட் தொடர்ந்தால் வரும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரும் மார்ச் மாதத்திற்குள் 87ஐ தொட்டுவிடும். இதற்கு முன்பு இருந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வட்டியை குறைக்கவில்லை. ஆனால், இப்போதைய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது. அப்படிக் குறைத்தாலோ அல்லது குறைப்பேன் என்று சொன்னாலே கூட ரூபாய் மதிப்பு சட்டென சரிந்துவிடும்.
ரிசர்வ் வங்கி 0.5% முதல் 0.75% வரை வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா வட்டி விகிதத்தைக் குறைக்காமல் நாம் மட்டும் இப்படி வட்டி விகிதத்தைக் குறைத்தால் ரூபாய் மதிப்பு தாங்காது. 88-க்கு போகக் கூட வாய்ப்புள்ளது. மறுபுறம் அங்கே டிரம்ப் வந்து வரியைப் போட்டால் டாலர் மதிப்பு மேலும் உயரவே செய்யும். தங்கம் விலை சர்வதேச சந்தையில் அதிகரிக்காவிட்டாலும் சஞ்சய் மல்ஹோத்ரா வட்டியைக் குறைத்து, ரூபாய் மதிப்பு சரிவதால் தங்கம் விலை நிலையாக இருக்கும். மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை மீண்டும் போட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும்" என்று கூறினார்.