கவனம்..! மகளிர் உரிமைத் தொகை 1,000.. போலி செய்தி பரப்பினால் காவல்துறை மூலம் நடவடிக்கை...!
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புபவர்கள் மீது காவல்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிரின் முன்னேற்றத்தினை கருத்தில் கொண்டு மாதம் ரூ.1,000/- வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தினை 15.09.2023 அன்று தொடங்கி வைத்தார்கள். சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தற்பொழுது 5,49,268 மகளிருக்கு மாதாந்திரம் ரூ.1,000/- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது சமூக ஊடகங்களில் எவ்வித முகாந்திரமுமின்றி “மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், மனுக்களை வழங்கினால் அனைவருக்கும் உடனே உரிமைத்தொகை கிடைக்கும்" எனவும் தவறான தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதுபோன்ற தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புபவர்கள் மீது காவல்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.