’திமுக ஆட்சிக்கு வந்தாலே ஊழல், கமிஷன் தான்’..!! ’தமிழக பாஜக பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது’..!! எச்சரிக்கும் அண்ணாமலை..!!
விசைத்தறியாளர்கள் நலனை அடகு வைக்கும் எண்ணம் திமுக அரசுக்கு இருந்தால், தமிழக பாஜக பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் திருச்செங்கோடு, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை சரக விசைத்தறி கூட்டுறவுச் சங்க நெசவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பல லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே, வேட்டி சேலைகள் பொதுமக்களுக்கும் வழங்கப்படும். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இத்திட்டத்தில் ஊழல் மற்றும் உற்பத்தியாளர்களிடம் கமிஷன் என முறைகேடுகள் பெருக ஆரம்பித்ததோடு, நூல் கொள்முதலில் காரணமில்லாத காலதாமதமும் ஏற்படுகிறது.
குறிப்பாக, இத்திட்டத்தில் கைத்தறித் துறை அமைச்சர் காந்தி செய்த ஊழல் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையில், தமிழக பாஜக புகாரும் அளித்தது. அதுபோக, இலவச வேட்டி சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களிடம், 10% கமிஷன் வாங்குவதும் திமுக ஆட்சியில் அரங்கேறி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் திமுக நூல் கொள்முதல் பணிகளை இன்னும் தொடங்கவில்லை. இதனால், விசைத்தறியாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர். கடந்தாண்டே, இலவச வேட்டி சேலை நூல் கொள்முதல் ஒப்பந்தத்துக்கான அரசாணை வெகு தாமதமாகத்தான் வெளியிடப்பட்டது.
இந்தாண்டுக்கான அரசாணையும் இதுவரை வெளியிடப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான், இது போன்ற காலதாமதம் ஏற்படுத்தப்படுகிறது. தற்போது திமுக ஆட்சியில், திமுகவினர் ஊழல் செய்வதற்காகவும், கமிஷன் வாங்குவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுவது மிகுந்த கண்டனத்துக்குரியது. உடனடியாக, இலவச வேட்டி சேலைக்கான நூல் கொள்முதல் ஒப்பந்தப் பணிகளைத் தொடங்கி, விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். கடந்த ஆண்டைப் போல, இந்த ஆண்டும் ஊழல் செய்வதற்காகவும், கமிஷன் வாங்குவதற்காகவும், விசைத்தறியாளர்கள் நலனை அடகு வைக்கும் எண்ணம் திமுக அரசுக்கு இருந்தால், தமிழக பாஜக பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்றும் எச்சரித்துக் கொள்கிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Read More : காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருகிறது ஜாக்பாட் அறிவிப்பு..!! அகவிலைப்படி உயர்வு..?