"இதை செய்தால் அண்ணாமலையை தமிழ்நாட்டில் இருந்தே விரட்டுவோம்".. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி.!
2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. விரைவிலேயே தேர்தல் நடைபெறும் தேதியை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கும் அறிக்கை வெளியிட்டுள்ளது. மற்றொருபுறம் அதிமுக மற்றும் பிஜேபி போன்ற கட்சிகள் தங்கள் தலைமையில் கூட்டணி அமைப்பதற்காக மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார்.
சமீப காலமாக அண்ணாமலை திமுக மற்றும் அந்தக் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகளின் மீது தொடர் அவதூறுகளை பரப்பி வருகிறார். சமீபத்தில் தமிழக சட்டசபையில் நடைபெற்ற ஆளுநர் தொடர்பான விவகாரத்திலும் முரணான கருத்துக்களை சமூக வலைதளத்தில் கூறி வந்ததாக அவர் மீது சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அண்ணாமலைக்கு நேரடி சவால் கொடுத்திருக்கிறார். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் வாங்கினால் அரசியலை விட்டே செல்கிறேன். அண்ணாமலை இதற்கு தயாராக.? என மேடையிலேயே பகிரங்க சவாலோடு உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக உரிமை மீட்பு மாநாடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி எம்பி கனிமொழி கருணாநிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் "பாஜக கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலைக்கு நேரடியாக சவால் விடுகிறேன். அவருக்கு தைரியம் இருந்தால் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழி கருணாநிதிக்கு எதிராக போட்டியிட்டு டெபாசிட் வாங்கி காட்டட்டும். அவர் டெபாசிட் வாங்கி விட்டால் நான் அரசியலில் இருந்தே விளக்குகிறேன்" என பகிரங்கமாக பேசியிருக்கிறார்.
மேலும் இது தொடர்பாக பேசிய அவர் " அண்ணாமலை தூத்துக்குடியில் போட்டியிட்டால் அவரை பாராளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல தமிழகத்திலிருந்து விரட்டுவதற்கான வேலையை கழக உடன்பிறப்புகள் செய்வார்கள் என தெரிவித்தார். மேலும் பாஜக அரசின் அமலாக்கத்துறை புலனாய்வுத்துறை போன்றவற்றை அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. இதற்கெல்லாம் பயப்படுகின்ற இயக்கம் திமுக அல்ல என தெரிவித்தார். தன் மீதும் அமலாக்கத்துறை வழக்குகள் இருக்கிறது எனக் கூறிய அவர் முடிந்தால் தன்னை தொட்டு பார்க்கட்டும் என சவால் விட்டார் . பாராளுமன்ற தேர்தலை எந்தவித அச்சமும் இல்லாமல் தைரியமாக எதிர்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் எனவும் கூறினார்.