முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Tasmac: 90 மி.லி மது அறிமுகம் செய்தால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்...! அன்புமணி எச்சரிக்கை...

08:05 AM Nov 26, 2023 IST | 1newsnationuser2
Advertisement

காகிதக் குடுவைகளில் 90 மி.லி மதுஅறிமுகம் செய்யப்பட்டால் மாபெரும்போராட்டத்தை பா.ம.க முன்னெடுக்கும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் மதுவகைகள் கண்ணாடி புட்டிகளில் அடைத்து விற்கப்படுவதற்கு மாற்றாக காகிதக் குடுவைகளில் (Tetra Pack) அடைத்து விற்கப்படவுள்ளதாகவும், அது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார். மது அருந்துபவர்கள் காலியான மதுப்புட்டிகளை கண்ட இடங்களில் வீசுவதால் சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளையும், ஆபத்துகளையும் ஒப்பிடும் போது காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறைவு. ஆனாலும், தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் கோணத்தில் பார்க்கும் போது, இந்த மாற்றம் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்படுவதை தாமதப்படுத்தும். அந்த வகையில் இதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

Advertisement

கண்ணாடி புட்டிகளில் மது விற்பனை செய்வதற்கு மாற்றாக, காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்வதால் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்பது உண்மை. ஆனால், தமிழ்நாட்டில் மது வணிகத்தையே முற்றிலுமாக நிறுத்தி விட்டால் சுற்றுச்சூழல், விலங்குகள், மனிதர்கள் என யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்த வாய்ப்பை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக காகிதக் குடுவைகளில் மதுவை வணிகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பது தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படுவதை தாமதப்படுத்தும்.

தமிழ்நாட்டில் படிப்படியாக முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் அரசின் நோக்கம் என்பதை முதலமைச்சர் அவர்களும், மதுவிலக்குத் துறை அமைச்சர் அவர்களும் பல முறை அறிவித்திருக்கிறார்கள். அனைவராலும் வரவேற்கப்படும் அந்த பாதையில் பயணத்தை விரைவுபடுத்துவது தான் இலக்கை விரைவாக அடைய உதவும். அதை விடுத்து காகிதக் குடுவையில் மது வணிகம் என்ற மாற்றுப்பாதையில் பயணிக்கத் தொடங்குவது இலக்கை அடைய எந்த வகையிலும் உதவாது. அந்த வகையில் காகிதக் குடுவைகளில் மது வணிகத்தை அறிமுகம் செய்வதற்கு மாற்றாக இம்மாத இறுதிக்குள் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிப்பது தான் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

இவற்றையெல்லாம் விட பாட்டாளி மக்கள் கட்சிக்கு உள்ள மிகப்பெரிய அச்சம் என்னவென்றால், காகிதக் குடுவைகளில் மது விற்பனை என்ற பெயரில், 90 மி.லி. மதுப்புட்டிகள் சந்தையில் அறிமுகம் செய்யப்படுமோ? என்பது தான். கடந்த ஜூலை மாதத்தில் இதுகுறித்த சர்ச்சை உச்சத்தில் இருந்த போது,”மாநிலம் முழுவதும் நடத்திய ஆய்வில் 40% வாடிக்கையாளர்கள், 180 மி.லி.பாட்டிலை வாங்கி, அதை முழுமையாக அவர் குடிக்க முடியாது என்பதால் மற்றொரு நபர் வரும் வரை காத்திருக்கிறார். அல்லது பாதி குடித்து விட்டு அந்த பாட்டிலில், மீண்டும் முழுமையாக நிரப்ப கலப்படம் செய்ய வாய்ப்புள்ளது. அதை 90 மிலி மது பாட்டில்கள் தடுக்கும்” என்று இதே மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் கூறியிருந்தார். அதே காரணத்தைக் கூறி 90 மிலி மதுப்புட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டால், அது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் பெருந்துரோகமாக இருக்கும்.

உடலுக்கு கேடு விளைவிக்கும் எந்த பொருளையும் எளிதாக வாங்கும் வகையில் குறைந்த விலையிலோ, குறைந்த அளவிலோ விற்கக் கூடாது என்பது தான் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை ஆகும். 90 மி.லி. அளவில் காகிதக் குடுவைகளில் மது விற்பனை செய்வதற்கும் இந்த வாதம் பொருந்தும். 90 மி.லி. காகிதக் குடுவை மது ரூ.70 என்ற அளவில் விற்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. ரூ.70 என்பது மிகவும் எளிதாக திரட்டப்படக் கூடியது. அதுமட்டுமின்றி காகிதக் குடுவைகளில் விற்கப்படும் மது, மில்க் ஷேக், பழச்சாறுகள் போன்றவற்றைப் போலவே தோற்றமளிக்கக்கூடியது என்பதால் சிறுவர்களோ, மாணவர்களோ காகிதக் குடுவைகளில் மது அருந்தினால் கூட அவற்றை மற்றவர்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது என்பதால் 90 மிலி மது வகை அறிமுகம் செய்யப்படுவது மிகப்பெரிய அளவில் சமூக சீரழிவை ஏற்படுத்தி விடும். இதை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.

தமிழ்நாட்டில் படிப்படியாக முழு மதுவிலக்கு என்பது தான் மக்களின் விருப்பம். அரசின் திட்டமும் அதுவாகத் தான் இருக்க வேண்டும். அதற்கு எதிரான வகையில், 90 மிலி காகிதக் குடுவையில் மதுவை அறிமுகம் செய்து, இளைய தலைமுறையினரிடம் மதுப்பழக்கத்தை அதிகரிக்க தமிழக அரசு முயன்றால் அதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. அதைக் கண்டித்து ஒட்டுமொத்த தமிழக மக்களையும் திரட்டி, வரலாறு காணாத அளவிலான போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags :
anbumaniDmkpmktasmactn government
Advertisement
Next Article