சீமான் - விஜயலட்சுமி வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!! ஏப்ரல் 2ஆம் தேதி கன்ஃபார்ம்..!!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "கடந்த 2011-ம் ஆண்டு அளித்த புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கடிதம் கொடுத்தார்.
அதன் அடிப்படையிலும், அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், போலீஸார் வழக்கை முடித்து வைத்தனர். இந்நிலையில், தற்போது அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, காவல்துறை எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது. திமுக அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் கருத்துகள் கூறி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2011இல் முடிக்கப்பட்ட வழக்கை, 12 ஆண்டுகளுக்குப் பின், அரசியல் உள்நோக்கத்துடன் மீண்டும் விசாரிக்கப்படுகிறது. எனவே, இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், 2011 மற்றும் 2023-ல் விஜயலட்சுமி அளித்த புகார்கள் மற்றும் வாபஸ் பெறப்பட்ட விவரங்களை தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், 2011-ல் அளித்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்ற நிலையில் அந்த வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பி, அதுகுறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
இதற்கிடையே, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஹைகோர்ட் மதுரை கிளைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் சீமான் மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற முறையீட்டின் அடிப்படையில் இந்த மனு மார்ச் 5ஆம் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது வரும் 19ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நடிகை விஜயலட்சுமிக்கு உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்நிலையில், இன்றைய தினமும் விஜயலட்சுமி ஆஜராகவில்லை. இதையடுத்து, ஏப்ரல் 2ஆம் தேதி விஜயலட்சுமி நேரிலோ அல்லது காணொலி மூலமாகவோ ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.