வாடிக்கையாளர்களுக்கு திடீரென எச்சரிக்கை விடுத்த ஐசிஐசிஐ வங்கி..!! உஷாரா இருங்க..!!
இன்றைய காலகட்டத்தில் நடைபெறும் சைபர் மோசடி குற்றங்கள் நன்கு திட்டமிட்டு தொழில்முறை நேர்த்தியோடு செய்யப்படுகின்றன. இதனால், சைபர் குற்றங்களை மக்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. உதாரணமாக வங்கியில் இருந்து அழைக்கிறோம் எனக் கூறி நமது வங்கி எண், கிரெடிட் கார்டு எண் போன்றவற்றை மோசடி நபர்கள் கேட்கும் போது, பலரும் எந்த சந்தேகமுமின்றி கொடுத்து விடுகிறார்கள். இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்களின் ஒரே நோக்கம் நம் பணத்தை திருடுவது தான். வங்கி அதிகாரிகள் போல் பேசி, நமது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் பெற்று பணத்தை வங்கி கணக்கிலிருந்து எடுத்துவிடுகிறார்கள். இவர்களைப் போன்ற நபர்களிடம் நமது வங்கி விவரங்களை ஒருபோதும் தரக்கூடாது.
இந்நிலையில், இதுபோன்ற மோசடிகளில் தங்களது வாடிக்கையாளர்கள் யாரும் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக சில டிப்ஸ்களை ஐசிஐசிஐ வங்கி கொடுத்துள்ளது. அதாவது, ஐசிஐசிஐ வங்கியிலிருந்து யாரும் ஓடிபி எண்ணையோ, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு எண் மற்றும் அதன் பின்புறமுள்ள CVV எண் போன்ற உங்களது ஆன்லைன் வங்கிக் கணக்கு எண் விவரங்கள் எதையும் ஒருபோதும் கேட்க மாட்டார்கள். அதேபோல், வங்கியின் அலுவலர்கள் யாரும் போனில் தொடர்பு கொண்டு உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் KYC நடைமுறையின் போது நீங்கள் தந்த தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே வங்கியிடம் இருக்கின்றன.
ஐசிஐசிஐ வங்கியில் இருந்து யாரும் எந்த வாடிக்கையாளர்களிடமும் ஒரு வங்கி கணக்கில் இருந்து இன்னொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றுமாறு கூறமாட்டார்கள். அப்படிக் கூறி யாராவது உங்களை தொடர்பு கொண்டால், உடனே அழைப்பை துண்டித்துவிடுங்க்ள். எங்களிடம் உங்கள் விவரங்களை கூறாவிட்டால் உங்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என மோசடி நபர்கள் உங்களை பயமுறுத்துவார்கள். இதனை யாரும் நம்பாதீர்கள். எக்காரணம் கொண்டும் அவர்களிடம் உங்கள் விவரங்களை கொடுத்துவிடாதீர்கள்.
ஒருவேளை தெரியாமல் மோசடி நபர்களிடம் உங்கள் வங்கி விவரங்களை கூறி, உங்கள் பணத்தை இழந்திருந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு தேசிய சைபர் குற்றத்தின் உதவி எண் 1930-யை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. சில சமயங்களில் வங்கியில் இருந்து தொடர்பு கொள்கிறோம் என உங்கள் வாட்ஸ் அப் எண்ணிற்கு கூட மெசேஜ் வரலாம். அப்படி வரும் மெசேஜ்களுக்கு எந்த பதிலும் அளிக்க வேண்டாம். மேலும், அனைத்து தரப்பு மக்களையும் குறிவைக்கும் முகமற்ற மற்றும் எல்லையற்ற எதிரிகளிடமிருந்து பாதுகாக்க சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.