"நடிகர் Vijay-க்கு ஆலோசகராக இருக்க மாட்டேன்" - பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு.!
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மும்முரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நீண்ட நாட்களாக அரசியலுக்கு வருவதாக எதிர்பார்க்கப்பட்ட தளபதி விஜய் (Vijay) சில வாரங்களுக்கு முன்பு தனது அரசியல் கட்சியை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் இவரது அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயரிடப்பட்டது. மேலும் இந்தக் கட்சி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நாள் முதல், இந்தக் கட்சியின் நடவடிக்கைகளை அரசியல் விமர்சகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்
2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கப் போவதாக விஜய் அறிவித்திருக்கிறார். வருகின்ற பாராளுமன்ற தேர்தல் பற்றிய அறிவிப்பு எதுவும் அவர் வெளியிடவில்லை. மேலும் கடந்த திங்கட்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டமாக இது நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி தொடர்பான பல முக்கிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது.
கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கப்பட வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் தொடர்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் விஜயாக (Vijay) வந்து கேட்டாலும் அவருக்கு முழு நேர தேர்தல் ஆலோசகராக பணியாற்ற மாட்டேன் என பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர் என்னை நாடி வருபவர்களுக்கு என்னால் முடிந்த அறிவுரைகளை வழங்குவேன். ஆனால் அவருக்கு முழு நேர தேர்தல் ஆலோசகராக பணியாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் திமுகவின் தேர்தல் ஆலோசகராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஆலோசனைகள் மற்றும் திட்டங்கள், தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதும் அறிந்ததே. அரசியலில் புதிதாக களம் இறங்கி இருக்கும் விஜய், இவரை ஆலோசகராக நியமிக்கலாம் என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்தது. ஆனால் தற்போது விஜய்க்கு முழு நேர ஆலோசகராக இருக்க மாட்டேன் என பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.