”டெல்லி திகார் சிறைக்கு அனுப்பிருவேன்”..!! ஓபிஎஸை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி..!!
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சென்னையில் மழை பெய்வதற்கு முன்பே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தும், திமுக அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அதிமுக ஆட்சியில் புயல், மழை காலங்களில் அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதிமுக சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டன. இந்த முறை மக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு கொடுக்கப்படவில்லை. அதே போல் தென்மாவட்டங்களிலும் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 19ஆம் தேதி நான் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டேன். ஆனால், அதுவரைக்கும் அமைச்சர்கள் யாரும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவில்லை.
கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு முடிவு செய்யப்படும். அதிமுக - பாஜக கூட்டணி கிடையாது என்று சொல்லிவிட்டோம். இது எங்கள் கட்சி பிரச்சனை. உங்களுக்கு ஏன் பதற்றம்? திமுக வெற்றி பெற்றுக் கொண்டே இருந்த கட்சியா? 66 இடங்களில் அதிமுக எம்.எல்.ஏ வெற்றி பெற்று இருக்கின்றனர். திமுகவுக்கும் அதிமுகவுக்கும் 1 சதவீத வாக்கு மட்டுமே வித்தியாசம்.
டெல்லி திஹார் சிறைக்கு போக ஓபிஎஸ் தயாராகிவிட்டார். என் மீது ஏதாவது பழியை சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார். ஆர்.எஸ்.பாரதி என் மீது வழக்கு போட்டார். உச்சநீதிமன்றம் வரை சென்றேன். திமுகவில் முன்வரிசையில் இருக்கும் அமைச்சர்கள் பலர் அடுத்து காத்திருக்கின்றனர். ஜெயலலிதாவுக்கு ரூ.2 கோடி கடன் கொடுத்தாராம் ஓபிஎஸ். இடையில் தான் ஓபிஎஸ் கட்சிக்கு வந்தார். போடிநாயக்கனூரில் ஜெயலலிதா போட்டியிட்ட போது 'வெண்ணிற ஆடை' நிர்மலாவிற்கு ஏஜென்ட்டாக இருந்தவர் ஓபிஎஸ்” என்று தெரிவித்தார்.