"மோடியின் சுயசரிதையில் நடிப்பேன்"…!! ஆனால்… நடிகர் சத்யராஜ் போட்ட கன்டிஷன்ஸ்!!
பிரதமர் மோடியின் மோடி வாழ்க்கை வரலாற்றில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அப்படி யாரும் தன்னிடம் அணுகவில்லை என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, கதாநாயகனாக புகழ்பெற்று தற்போது சிறந்த குணசித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் சத்யராஜ். இவர், தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பெரியாராக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருந்தார். அதேபோல் தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்காகப் பெரியாரியவாதிகளின் பெரும் மதிப்பும் அவருக்கு கிடைத்தது.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க நடிகர் சத்யராஜ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியானது. பாலிவுட்டில் தயாராகும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளதாகவும், பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்க உள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், படக்குழுவினரின் விவரங்களும் விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆன்டனி, சத்யராஜ், சரத்குமார் ஆகியோர் நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்யராஜிடம் மோடி வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், “இல்லைங்க, மோடி வாழ்க்கை வரலாற்றில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை, ஒருவேளை மணிவண்ணன் போன்ற இயக்குனர்கள் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுத்தால் நன்றாக இருக்கும். உள்ளதை உள்ளபடி எடுக்கும் எந்த இயக்குனராக இருந்தாலும் நான் நடிக்க தயாராக உள்ளேன். வெற்றிமாறன், பா.ரஞ்சித் அல்லது மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் எடுத்தால் நான் நிச்சயம் நடிப்பேன், அவர்கள் தான் உள்ளதை உள்ளபடியே எடுப்பார்கள்” என எப்போதும் போலான அவரது பாணியில் கலகலப்பாக பேசினார்.
Read More: மனைவிகளை விருந்தினர்களுக்கு விருந்தாக்கும் வினோத கிராமம்! எங்க இருக்கு தெரியுமா?