IPL 2024 | "டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்காக விளையாட விரும்புகிறேன்…" தினேஷ் கார்த்திக் அதிரடி பேட்டி.!!
IPL 2024: ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வைத்து நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா அணிக்காக விளையாட விரும்புவதாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் வருட ஐபிஎல்(IPL 2024) தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை நடந்து முடிந்த ஆட்டங்களில் 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்திலும் தலா 8 புள்ளிகள் உடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
இதுவரை ஆடிய ஏழு போட்டிகளில் ஆறு தோல்விகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டு புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஹைதராபாத் அணி ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்து சாதனை படைத்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 287 ரன்கள் குவித்தது. இதனை எதிர்த்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விரைவாக விக்கெட் களை இழந்தாலும் ஒரு முனையில் நின்று ஆடிய தினேஷ் கார்த்திக் மிகவும் அதிரடியாக விளையாடி தனது அணியை வெற்றியின் அருகில் அழைத்துச் சென்றார்.
மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 35 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பெங்களூரு அணிக்காக பினிஷர் ஆக விளையாடும் தினேஷ் கார்த்திக் இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் . நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியிருக்கும் தினேஷ் கார்த்திக் 226 ரன்கள் எடுத்திருக்கிறார்.
இவற்றில் 2 அரை சதங்கள் அடங்கும். நடப்பு ஐபிஎல் தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 205.6. இந்நிலையில் நாளை நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினேஷ் கார்த்திக் வர இருக்கின்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக விளையாட விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய அவர்" தற்போது சிறப்பாக விளையாடி வந்தாலும் உலக கோப்பையில் தனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.