என் அப்பாவால் தற்கொலை செய்ய நினைத்தேன்..!! - பாட்டல் ராதா டிரைலர் வெளியீட்டு விழாவில் பா ரஞ்சித் எமோஷனல் பேச்சு..!!
பா.ரஞ்சித் மற்றும் அருண் பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பாட்டல் ராதா’. இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகியிருந்தது. இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் அமீர், வெற்றிமாறன். மிஸ்கின், லிங்குசாமி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
போதைக்கு அடிமையானவர் எப்படி அதிலிருந்து மீண்டு வருகிறார் என்பதை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இது போன்ற கதையை மையப்படுத்தி பல படங்கள் திரைக்கு வந்துள்ளன. பாட்டில் ராதா படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பா ரஞ்சித் தற்கொலைக்கு முயற்சி செய்தது குறித்து பேசியுள்ளார். இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சாப்பாட்டுக்காக நாங்கள் யாரிடமும் கையேந்தி நின்றது கிடையாது. என்னுடைய அப்பாவும் அந்த நிலைக்கு கொண்டு சென்றது இல்ல. ஆனால், அவர் குடிப்பக்கம் என்று வரும் போது தன்னையே இழந்துவிடுவார். திருவிழா நாளில் ஊரே கொண்டாட்டமாக இருக்கும். ஆனால், என்னுடைய அம்மா மட்டும் அழுது கொண்டே இருப்பாங்க. நான் அப்போது 12ஆவது படித்து கொண்டிருந்தேன்.
ஒருநாள் என்னுடைய அம்மா அழுவதை தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று யோசித்தேன். அப்பாவை அதிலிருந்து மீட்டு கொண்டு வர அம்மா தான் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. கடைசியில் என்னுடைய அப்பா இறந்துவிட்டார். என்னுடைய அம்மா பட்ட கஷ்டத்தை என்னுடைய மனைவியும் படக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.