”நான் கூறிய கருத்துகள் அனைத்தையும் திரும்பப் பெறுகிறேன்”..!! பகிரங்க மன்னிப்புக் கேட்டார் கஸ்தூரி..!!
கடந்த 3ஆம் தேதி சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்கள் பாதுகாப்பு கோரியும், இழிவுப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் தனி சட்டத்தை கொண்டு வரக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து குறிப்பிட்டது பெரும் சர்ச்சையானது. கஸ்தூரியின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது.
இதற்கு எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்த கஸ்தூரி, தனது பேச்சை சிலர் திரித்துவிட்டதாகவும், திராவிட அரசியலின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தும் வகையிலேயே தான் பேசியதாக தெரிவித்தார். ஆனாலும், கண்டனங்கள் தொடர்ந்து வலுத்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி, தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, தெலுங்கு மக்கள் தன்னை மருமகளாக, தங்கள் வீட்டு மகளாக ஏற்று கொண்டவர்கள்.
அவர்களை பற்றி அவதூறாக எதுவும் பேசவில்லை. தெலுங்கு மக்களை தான் இழிவாக பேசியதாக பொய் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் பிராமணர்களுக்கு இடமளிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கிடையே தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்காகவே 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்தார்.
இந்நிலையில், தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கேட்டுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என கூறியதால், கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், நான் கூறிய கருத்து தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது. தெலுங்கு பேசும் மக்களை புண்படுத்தும் நோக்கில் நான் பேசவில்லை. நான் கூறிய கருத்துகள் அனைத்தையும் திரும்பப் பெறுகிறேன்” என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.