’சித்தர்கள் தன்னிடம் சொன்னதைத்தான் மாணவர்கள் மத்தியில் பேசினேன்’..!! போலீசாரிடம் மகாவிஷ்ணு வாக்குமூலம்..!!
பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மகா விஷ்ணு என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் சித்தர்கள் தன்னிடம் சொன்னதைத்தான் பேசியதாகவும் போலீசார் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 'பரம்பொருள்' அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு கடந்த 28ஆம் தேதி 'தன்னம்பிக்கை ஊட்டும்' பேச்சு என்ற பெயரில் சொற்பொழிவாற்றினார். அப்போது மாற்றுத்திறனாளிகள் குறித்த அவரது பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து, அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறுகையில், ”மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மகாவிஷ்ணு, இளம் வயதிலேயே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவராக இருந்துள்ளார். தொடக்கத்தில் கோயில் திருவிழாக்களில் சொற்பொழிவாற்றியவர், பின்னாளில் 'பரம்பொருள்' என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி யூடியூப் மூலம் பேசி வந்துள்ளார்.தற்போது, வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறார்.
அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளில் மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக உரையாற்றியதாகவும், தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அவர் அடிக்கடி தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், அப்போது சித்தர்கள் தன்னிடம் சொன்னதைத்தான் மாணவர்கள் மத்தியில் பேசியதாகவும் கூறினார். மேலும், சிறைக்குச் சென்றால், அங்கு கைதிகளிடமும் இதைத்தான் பேசுவேன் என்றும் தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்றும் சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்” என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், திருவொற்றியூரில் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் அளித்த புகாரின்பேரிலும், காவல் ஆணையர் அலுவலகத்தில் மற்றொரு மாற்றுத்திறனாளி சங்கத்தினர் அளித்த புகாரின் பேரிலும் தொடர்ச்சியாக மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இவர் அடுத்தடுத்த வழக்குகளில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
Read More : குட்நியூஸ்!. இந்த நாளில் அகவிலைப்படி அறிவிப்பு!. உயர்வு இருந்தால் நிலுவைத் தொகையும் வழங்கப்படும்!