”சீமான் பிரபாகரனை நேரில் சந்தித்ததே இல்லை”..!! ”அந்த ஃபோட்டோவை எடிட் செய்ததே நான் தான்”..!! பரபரப்பை கிளப்பிய இயக்குனர்
'விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை’ என்று சினிமா இயக்குநர் ராஜ்குமார் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த சினிமா இயக்குநர் ராஜ்குமார், தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ”சீமான் அவரை சந்திக்கவே இல்லை. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன்” என்கிற அடிப்படையில் சொல்கிறேன் எனக்கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ”நான் கடந்த 2007-08ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்த்து கொண்டிருந்தேன்.
அப்போது சீமானுடன் இருக்கும் செங்கோட்டையன் என்பவர் ஒருநாள் ஒரு டிவிடியில் பிரபாகரனுடன் இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் இருப்பது போல் 10 படங்களைக் கொண்டு வந்து கொடுத்தார். அதில், சீமான் படத்தையும் கொடுத்து பிரபாகரனுடன் சீமான் இருப்பது போல் ஒரு படத்தை தயார் செய்து தருமாறும், அதை சீமானுக்கு கிப்ட் ஆக கொடுக்கப் போவதாகவும் கூறினார். நினைவுப்பரிசாகத் தானே கொடுக்க போகிறார்கள் என எண்ணி பிரபாகரனுடன் சீமான் கைகளை கட்டிக்கொண்டிருப்பது போல் படத்தை எடிட் செய்து கொடுத்தேன்.
அந்த படத்தை தான், தற்போது சீமான் பயன்படுத்தி வருகிறார். அந்த படத்தில் சீமானுக்கு ஷேடோ (நிழல்) இருப்பது போல் செய்திருப்பேன். ஆனால், பிரபாகரன் படத்திற்கு பின்னால் ஷேடோ இருக்காது. அதை வைத்தே கண்டு பிடித்துவிடலாம். இது நான் எடிட் செய்தது என்பதால், முழுமையாக தெரியும். இதை தற்போது நான் கூறுவதற்கு காரணம் சீமான் பெரியார் பற்றி பிஜேபி எண்ணங்களை பேசி அசிங்கப்படுத்தி வருகிறார். அதனால் தான் அந்த படத்தின் உண்மைத் தன்மையை வெளியே கூறியிருக்கிறேன். இப்பவும் உண்மையை சொல்லவில்லை என்றால் இப்படி பேசாமலே இருந்து விட்டோமே என்ற எண்ணம் என்னை வாட்டும். அதனால்தான் அந்த படம் நான் எடிட் செய்த படம் என்ற உண்மையை கூறியிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.