”ரமணிக்காக சிங்கப்பூர் வேலையை தூக்கி எறிந்துவிட்டு வந்தேன்”..!! கெஞ்சினேன், போராடினேன்..!! பரபரப்பு வாக்குமூலம்..!!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்காவில் உள்ள மல்லிப்பட்டினத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ரமணி (26) என்பவர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, மதன் என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். 30 வயதான மதன்குமார், ஆசிரியை ரமணியை ஒருதலையாகக் காதலித்து வந்ததாக தெரிகிறது. அவரை பெண் கேட்டு வீட்டிற்கு சென்றபோது ரமணியின் பெற்றோர் மறுத்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த மதன் குமார் ரமணி பணிபுரியும் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர், வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ரமணியை கண்டதும், தான் மறைத்து எடுத்து வந்திருந்த கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால், ரமணி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து, பள்ளியில் இருந்த சக ஆசிரியர்கள் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணையில் மதன்குமார் அளித்த பகீர் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில், ”சிறு வயதில் இருந்தே நானும் ரமணியும் பேசி பழகி வந்தோம். நான் சிங்கப்பூரில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை செய்து வந்தேன். ரமணியை திருமணம் செய்து வாழலாம் என நினைத்து அங்கிருந்து ஊருக்கு வந்து மீன்பிடிக்கும் வேலை செய்தேன். மற்ற நேரத்தில் எலக்ட்ரீசியன்களுக்கு உதவி செய்யும் வேலைகளும் செய்தேன்.
28 வயதாகிவிட்டதால் எனக்கு வீட்டில் பெண் பார்க்க தொடங்கிவிட்டனர். அப்போது ஆசிரியை ரமணி வீட்டில் சென்று பெண் கேட்கும்படி கூறினேன். அவர்களும் சென்று கேட்டனர். அவர்கள் சரியான பதில் கூறவில்லை. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு எனது ஜாதகத்தை ரமணியின் வீட்டில் வாங்கிச் சென்றனர். இருவருக்கும் திருமணம் நடைபெற்றால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்காது என்றும் இனி பெண் கேட்டு வர வேண்டாம் என்றும் அவர்கள் சொல்லிவிட்டனர்.
இதையடுத்து ரமணியின் நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்பட தொடங்கியது. என்னுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்தார். இதனால் ஒவ்வொரு நாளும் வலியால் துடித்தேன். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் ரமணி புரிந்து கொள்ளவில்லை. இதனால், கடைசியாக நேரில் சென்று பேசிப் பார்க்கலாம் என நினைத்து பள்ளிக்குச் சென்றேன். அங்கு ஆசிரியர்களின் அறையில் இருந்த ரமணியிடம் ''நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது'' என்று கூறினேன்.
ஆனால், அவர் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். நீ இங்கிருந்து போய் விடு என்று விரட்டினார். எவ்வளவோ போராடியும் அவர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால், கோபமடைந்த நான் அவரை கொலை செய்துவிட்டேன். பின்னர் அதை நினைத்து வருத்தப்பட்டேன்” என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் மதன்குமார்.