அதிக இன்சுலின் கொடுத்து 19 பேரை கொலை செய்தேன்!… செவிலியரின் பகீர் வாக்குமூலம்!
அமெரிக்காவில் இரண்டு நோயாளிகளுக்கு அதிக இன்சுலின் கொடுத்து மரணத்திற்கு காரணமாக இருந்த செவிலியர் ஒருவர், மேலும் 17 பேரைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த செவிலியர் ஹீதர் பிரஸ்டீ. 41 வயதான பிரஸ்டீ நோயாளிகளின் உடலில் சர்க்கரை அளவைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதிகப்படியான இன்சுலின் வழங்கி அவர்களைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. பலியான 19 நோயாளிகள் 43 முதல் 104 வயது வரை ஆனவர்கள். வழக்கில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஹென்றி, “பிரஸ்டீ மீதான குற்றச்சாட்டுகள் கவலையளிக்கின்றன. ஒரு செவிலியர், தனது நோயாளிகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்க வேண்டும். ஆனால், வேண்டுமென்றே அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் செயலைச் செய்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது கடினம்” என்று கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் இழப்பை அளவிடமுடியாது. மருத்துவப் பராமரிப்பில் உள்ள ஒவ்வொரு நபரும் பாதுகாப்பாக உணர வேண்டும். நடந்திருக்கும் குற்றங்களுக்குப் பொறுப்பேற்று, பென்சில்வேனியா மக்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற தீங்குக்கு ஆளாகாமல் பாதுகாக்கப்படுவார்கள்" என்றும் அட்டர்னி ஜெனரல் கூறினார். பிரஸ்டீ இதற்கு முன் கடந்த மே மாதம் மூன்று நோயாளிகளைத் தவறாக நடத்தியதற்காக குற்றம் சாட்டப்பட்டார். அவர்களில் இருவர் இறந்துபோனார்கள். கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர்மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பிரஸ்டீக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து அவர் பட்லர் கவுண்டி சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.