”நீங்களாச்சும் தருவீங்கன்னு தானே வந்தேன்”..!! எம்பி சீட் கொடுத்த மறுத்த பாஜக..!! அப்செட்டில் விஜயதரணி..!!
அண்மையில் பாஜகவில் இணைந்த விஜயதாரணி, கன்னியாகுமரி எம்.பி சீட் கேட்டு வந்த நிலையில், மீண்டும் பொன்னாருக்கே பச்சைக்கொடி காட்டியுள்ளது பாஜக தலைமை. எனவே, விளவங்கோடு இடைத்தேர்தலில் விஜயதாரணிக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த மூன்று முறையாக தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதாரணி, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜகவில் இணைந்தார். விஜயதாரணி, 2021ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், அது கிடைக்காமல் போன பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியாவது கிடைக்கும் என நினைத்துக் காத்திருந்தார். ஆனால், சமீபத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது.
இதனால், அதிருப்தி அடைந்த விஜயதரணி, பாஜகவில் இணைந்தார். விஜயதாரணி கட்சி தாவியதால் அவர் எம்.எல்.ஏவாக பதவி வகித்து வந்த விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ பதவி பறிபோனது. விஜயதரணி, வரும் லோக்சபா தேர்தலில் சீட் தர வேண்டும் என பாஜகவிடம் கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக எம்பி சீட் கொடுக்க வேண்டும் என விஜயதாரணி நிர்ப்பந்தம் செய்து வந்துள்ளார். இதனால், கன்னியாகுமரி தொகுதியில் 9 முறையாக போட்டியிட்டு வரும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலாக விஜயதரணிக்கு இந்த முறை சீட் கொடுக்கப்படலாம் என பேச்சுகள் எழுந்தன.
பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பாஜகவை கன்னியாகுமரி பகுதியில் வளர்த்தவர் பொன்.ராதாகிருஷ்ணன் எனும் இமேஜ் தேசியத் தலைமைக்கு இருப்பதால், பொன்.ராதாகிருஷ்ணனை கைவிட்டுவிட மாட்டார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், மீண்டும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். விஜயதாரணிக்கு எம்.பி சீட் வழங்கப்படவில்லை. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் சீட் கேட்டு அங்கு மறுக்கப்பட்டதால், பாஜகவில் இணைந்த விஜயதரணிக்கு பாஜகவிலும் எம்.பி சீட் வாய்ப்பு வழங்கப்படாதது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலுடன் விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலும் நடைபெற இருப்பதால், விளவங்கோடு எம்.எல்.ஏ சீட் விஜயதரணிக்கு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. விளவங்கோடு தொகுதியில் 3 முறை கை சின்னத்தில் நின்று வென்ற விஜயதரணிக்கு, இந்த முறை பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமா? அதில் அவர் வெற்றி பெறுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு குமரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
Read More : ”ரெக்க கட்டி பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள்”..!!ஜி.கே.வாசன் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு..!!