ஜெ.ஜெயலலிதா என்னும் நான்!… ஆளுமையின் 7ஆம் ஆண்டு நினைவு தினம்!
கர்நாடகா மாநிலம் மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் - வேதவல்லி பெற்றோருக்கு மகளாக ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் மறைந்தார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த அவரது அன்னை வேதவல்லி என்ற தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். அவர்கள் பெங்களூரில் வசித்த பொழுது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார்.
பிறகு சென்னைக்கு வந்த அவர்கள் 1958-ம் ஆண்டு முதல் 1964-ம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் 10-ம் வகுப்பு படித்தார். அதன்பிறகு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க அனும05:12 05-12-2023தி கிடைத்தது. அதே சமயம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே தனது படிப்பை கைவிட்டு நடிகையானார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
ஜெயலலிதா சிறு குழந்தையாக இருக்கும் போதே எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறமையைப் பெற்றிருந்தாள். படிப்பில் முகவும் கெட்டிக்காரி. ஆங்கில மொழியை நன்கு அறிந்து சரளமாகப் பேசக் கூடியவர் என்று அவரது தயார் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, 1971-ம் ஆண்டு காலமானார். பதினைந்து வயதில் திரை நட்சத்திரமாகத் தனது வாழ்வைத் துவங்கியவர் ஜெயலலிதா. அவர் மொத்தம் 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். "எபிஸில்" என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.
1964-ல் "சின்னடா கொம்பே" என்ற கன்னட படம் மூலம் இந்திய திரை உலகில் நுழைந்தார். இப்படம் அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. ஒரு வருடம் கழித்து "வெண்ணிற ஆடை" என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அவரது நடிப்பைத் தொடங்கினார். அடுத்தடுத்து அவர் பல தமிழ் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். நடிகர் எம்.ஜி.ஆருடனான அவர் ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் இணைந்து நடித்தார்.
ஜெயலலிதா நிறைய வாசிப்பவர். நாவல் எழுதியவர். சிறுகதைகள் எழுதியவர். துக்ளக் பத்திரிகையில் இவர் கட்டுரைகளையும், புத்தக விமர்சனங்களையும் எழுதியவர்.1980-ம் ஆண்டு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள், அ.இ.அ.தி.மு.க., பிரச்சார செயலாளராக ஜெயலலிதாவை நியமித்தார். மேலும் 1983-ம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார் ஜெயலலிதா.
நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். பின்னர், அவர் தீவிரமாக அ.இ.அ.தி.மு.க., அரசியல் கட்சி உறுப்பினராக ஈடுபட்டார். எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் தலைமை அமைச்சராக பணியாற்றிய போது, ஜெயலலிதா அவருடைய அரசியல் கட்சியின் செயலாளராக இருந்து தன் தீவிர பங்கை வெளிப்படுத்தினார். இதுவே, ஜெயலலிதா அவர்களை, அ.இ.அ.தி.மு.க., கட்சியின் எதிர்கால வாரிசாக, ஊடகங்களை மதிப்பிட செய்தது.
ஜெயலலிதாவை, 1984-ல் மாநிலங்களவை உறுப்பினராக்கி, நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார். நாடாளுமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவராகவும் ஆக்கினார். மாநிலங்களவையில் ஜெயலலிதா பேசிய பேச்சுகள், அவருக்குப் புகழை தேடித் தந்தன. அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து தனி ஆதரவு வட்டம் ஒருவருக்கு அப்போதே இருந்தது என்றால் அது ஜெயலலிதாவுக்குத்தான். இயல்பான ஒரு வளர்ச்சியாக ஜெயலலிதாவின் முன்னேற்றம் இருந்தது. 1984-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது எம்.ஜிஆருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்து அதிமுகவுக்கு ஆதரவு திரட்டினார் ஜெயலலிதா. அவரது பிரச்சாரத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.
அதிமுகவும் அமோக வெற்றி பெற்றது. 1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைந்த பின்னர், 1988ல் அதிமுக உடைந்தது. ஜெயலலிதா தலைமையில் ஒரு கட்சியும், ஜானகி எம்.ஜி.ஆர். தலைமையில் இன்னொரு பிரிவுமாக கட்சி பிளந்தது. ஆனால் 1989 தேர்தலில் ஜெயலலிதா தான்தான் எம்.ஜி.ஆரின் வாரிசு, அடுத்த தலைவர் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். இதையடுத்து ஜானகி விலகிக் கொண்டார். அதிமுக ஒரே கட்சியாக மீண்டும் இணைந்தது. ஜெயலலிதா தலைமையில் புதிய பாதையில் நடை போட ஆரம்பித்தது அதிமுக. 1989-ம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, அதிரடியாக செயல்பட ஆரம்பித்தார். தமிழக சட்டசபையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாதான்.
1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி சட்டசபையில் நடந்த வரலாறு காணாத வன்முறைச் சம்பவம் சட்டசபையின் வரலாற்றில் மிகப் பெரிய களங்கமாக அமைந்து போனது. தான் திமுகவினரால் தாக்கப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ஜெயலலிதா. கலைந்த தலையும், கிழிந்த சேலையுமாக அவர் வெளியே வந்து பேட்டி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1991ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தார் ஜெயலலிதா. தேர்தல் பிரச்சாரத்தின்போது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதனால் ஏற்பட்ட அனுதாப அலையால் அதிமுகவுக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. முதல் முறையாக முதல்வர் பதவியல் அமர்ந்தார் ஜெயலலிதா.
இவர் தமிழக முதலமைச்சராக 1991 முதல் 1996 வரை இருந்தார். அவர் ஆட்சி புரிந்த விதம் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று. அந்த காலகட்டத்தில்தான் அவர் மிகப் பெரிய அளவில் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக பின்னாளில் வழக்குத் தொடரப்பட்டது. 1996ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் 2001ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். அதை 2006ல் பறி கொடுத்தார்.
2011ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது அதிமுக. மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. இந்த நிலையில்தான் 2014ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் தான் பிறந்த கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டது அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. 2015 மே 11 அன்று சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து 5-வது முறையாக ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
2016 சட்டசபைத் தேர்தலில் புதிய வரலாறு படைத்து வெற்றி பெற்றுள்ளது அதிமுக. 1984ம் ஆண்டுக்குப் பிறகு மாறி மாறி திமுக, அதிமுக ஆட்சியைப் பிடித்து வந்த நிலையில் முதல் முறையாக அதிமுக ஆட்சியை தக்க வைத்துள்ளது. எம்.ஜி.ஆரின் வாரிசு என்பதை இதிலும் நிரூபித்து ஆறாவது முறையாக முதல்வரானார் ஜெயலலிதா. ஆனால், காலம் மிக மிக மோசமானது எம்.ஜி.ஆரைப் போலவே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த சில மாதங்களிலேயே உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சுமார் 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு இதே நாளில் காலமானார்.
மக்களால் நான்… மக்களுக்காகவே நான், எனக்கென்று யாரும் இல்லை தமிழக மக்கள் தான் என் குடும்பம், என் வாழ்வு தவ வாழ்வு அது உங்களுக்காகவே என்று முழங்கிய இரும்பு பெண்மணி முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று. அம்மா என்றும் , புரட்சித் தலைவி என்றும் அதிமுகவினராலும் தமிழக மக்களாலும் அழைக்கப்பட்ட தமிழக முன்னால் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைந்து இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.