1,70,000 மின்சார வாகனங்களை திரும்பப் பெறும் ஹூண்டாய், கியா நிறுவனம்…! வாகனம் ஓட்டும் போது திடீரென Breakdown ஆக வாய்ப்பு..!
தென் கொரியாவில், ஹூண்டாய் மோட்டார் மற்றும் அதன் சகோதர நிறுவனமான கியா கார்ப் ஆகியவை சார்ஜிங் சிஸ்டங்களில் மென்பொருளில் உள்ள சிக்கல்கள் காரணமாக சுமார் 1,70,000 மின்சார வாகனங்களை (EV) திரும்பப் பெறுகின்றன. இந்த திரும்பப்பெறுதல் நடவடிக்கைகள் மார்ச் 18 ஆம் தேதி தொடங்கும். இது குறித்து பல புகார்கள் எழுந்த நிலையில், தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் இதனை எதிரொலித்தது. அதன்பிறகு ஆட்டோமொபைல் நிறுவனங்களால் இந்த திரும்பப்பெறுதல் நடவடிக்கை அறிவிக்கப்பட்டது.
ஹூண்டாய் நிறுவனம் 1,13,916 மின்சார வாகனங்களை திரும்பப் பெறுகிறது, இதனால் ஐயோனிக்-சீரிஸ் மற்றும் ஜெனிசிஸ் மாடல்கள் உட்பட ஐந்து EV மாடல்கள் பாதிப்படையும் என்றும், கியா நிறுவனம் 56,016 மின்சார வாகனங்களை திரும்பப் பெறுகிறது என்றும் தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1,70,000 ஹூண்டாய் மற்றும் கியா மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஒருங்கிணைந்த சார்ஜிங் கட்டுப்பாட்டு அலகுகளின் மென்பொருளில் பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன, இது குறைந்த மின்னழுத்த பேட்டரியை இயக்குவதை கடினமாக்கும் மற்றும் வாகனம் ஓட்டும் போது வாகனங்கள் நிறுத்தப்படலாம் என்று அமைச்சகம் தெரிவித்தது.
இது குறித்து ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் அறிக்கையில் "ஹூண்டாய் மோட்டார் மற்றும் கியா வாடிக்கையாளர்களின் சிரமத்தைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்கும், மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் வாகனங்களின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும்" என்று தெரிவித்துள்ளது.
எஞ்சினில் தீப்பிடிக்கும் அபாயம் இருப்பதால் கடந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 3.4 மில்லியன் வாகனங்களைத் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.