5 நாள் பட்டினி.! சாப்பிட கிடைத்தது இறந்த பூனை மட்டுமே.! கேரளாவில் அசாம் இளைஞரின் பசிப் போராட்டம்.!
'தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று பாடினார் பாரதியார். ஆனால் கேரளாவில் ஒரு இளைஞன், பசி கொடுமையின் காரணமாக இறந்த பூனையும் இறைச்சியை பச்சையாக உண்டிருக்கிறார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவருக்கு உணவளித்து, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அன்று கேரளாவின் குட்டிப்புரத்தில் உள்ள பேருந்து நிலையத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், இறந்த பூனையின் கறியை பச்சையாக உண்பதை மக்கள் பார்த்துள்ளனர். கடந்த ஐந்து நாட்களாக சாப்பிட வழியில்லாமல், பசி கொடுமையின் காரணமாக இறந்த பூனையை சாப்பிட்டதாக கூறியுள்ளார் அந்த இளைஞர்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இளைஞரிடம் விசாரணையை மேற்கொண்டனர். ஐந்து நாட்களாக பட்டினி கிடக்கும் அந்த இளைஞரைக் கண்டதும் மனமிரங்கி, அவருக்கு உணவளித்துள்ளனர். எந்த தயக்கமும் இன்றி அந்த இளைஞர் அதை வாங்கி உண்டிருக்கிறார். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து மறைந்திருக்கிறார்.
பின்னர் பிப்ரவரி 4ஆம் தேதி காலை, உள்ளூர் ரயில் நிலையத்தில் அந்த இளைஞர் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று அவர்கள் அந்த இளைஞரின் உறவினர்களைப் பற்றி விசாரித்துள்ளனர். அவரிடம் இருந்து கைப்பற்றிய அவரது அண்ணனின் தொலைபேசிக்கும் தொடர்பு கொண்டு விபரங்களை சரி பார்த்துள்ளனர்.
அந்த இளைஞர் கல்லூரி மாணவன் என்றும் தனது குடும்பத்துக்கு தெரியாமல் டிசம்பர் மாதத்தில் ரயில் ஏறி கேரளாவிற்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த இளைஞர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். உடல் நலனிலோ, மனநலனிலோ அவருக்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. அவரது உறவினர்களை வரவழைத்து அவரை ஒப்படைக்கப் போவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.