விநாயகர் சதுர்த்தி அன்று எப்படி வழிபட வேண்டும்..? உகந்த நேரம் எது..?
இந்தியாவில் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. அந்த வகையில், இந்தாண்டின் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகரை எப்படி வணங்க வேண்டும் என்று கோவில் அர்ச்சகர் கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, விநாயகர் சதர்த்திக்கு முந்தைய நாளே வீட்டை நன்றாக சுத்தம் செய்து கழுவ வேண்டும். விநாயகர் சதுர்த்தி நாளில் கடைகளில் வாங்கிய அல்லது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறையில் வைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியை மதியம் 1 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும். (காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை ராகு காலமும், மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை எமகண்டமும் வருவதால் அந்த நேரத்தில் வழிபடாமல் இருப்பது நல்லது)
பூஜை செய்வதற்கு ஏதுவாக விநாயகர் சிலைக்கு முன்பு வாழை இலை வைத்து வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களையும், விநாயகருக்கு பிடித்த உணவுகளான கொழுக்கட்டை, சுண்டல், பால், தயிர், தேன், அவல், பொறி, லட்டு போன்றவற்றையும் வைக்க வேண்டும். இவை அனைத்தும் வைக்க முடியாதவர்கள் கொழுக்கட்டை மற்றும் சுண்டல் வைத்தாலே போதும்.
பின்னர், விளாம்பழம், மாதுளை, வாழைப்பழம், கொய்யாப்பழம் ஆகியவற்றை வைக்க வேண்டும். விநாயகருக்கு மிகவும் உகந்த மாலையாக கருதப்படும் எருக்கம்பூவால் ஆன மாலையை அணிவிக்கலாம். விநாயகருக்கு உகந்த அருகம்புல்லை அவருக்கு சூட்டுவதும் சிறப்பானது. மாலை அணிவித்து, படையலிட்ட பின்பு தீபாராதனை காட்டி விநாயகரை வணங்க வேண்டும்.