டெபிட் கார்டு இல்லாமலே UPI பின்னை அமைக்கலாம்.. எப்படி தெரியுமா?
UPI பரிவர்த்தனைகள் நம் அன்றாட வாழ்வில் எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. நம்மில் பலரும் சிறிய கடைகள் முதல் பெரிய மால்கள் வரை நாம் வாங்கும் பொருட்களுக்கு UPI மூலம் பணம் செலுத்துகிறோம். அதேபோல் மற்றொருவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றாலும் UPI மூலமே பணம் அனுப்புகிறோம். ஆனால் அதற்கு அவரது மொபைல் எண் அல்லது UPI ID கட்டாயம் வேண்டும். அப்போதுதான் எளிதாக பணம் அனுப்ப முடியும்.
ஒவ்வொரு UPI பரிவர்த்தனைக்கும் 4 முதல் 6 இலக்க UPI பின்னை அமைத்து, அதனை உள்ளிட வேண்டும். எனினும் இந்த பின்னை அமைக்க டெபிட் கார்டு தேவை. ஆனால் டெபிட் கார்டு இல்லாமலேயே இப்போது UPI பின்னை அமைக்கலாம் என்பது பலருக்கும் தெரியாது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
இதற்கு முன்பு UPI பின்னை உருவாக்க வேண்டுமானால் மிகப்பெரிய செயல்முறை இருந்தது. இப்போது பின் ஜெனரேட் செய்ய பல வழிகள் உள்ளன. . டெபிட் கார்டில் உள்ள கார்டு எண், காலாவதி தேதி ஆகியவற்றை உள்ளிட்டால் UPI பின் ஜெனரேட் ஆகும். டெபிட் கார்டு இல்லாமலேயே UPI பின்னை அமைக்கும் எளிய வழியை தேசிய பணப்பரிமாற்றக் கழகம் (NPCI) வழங்கியுள்ளது.
எப்படி UPI பின்னை அமைப்பது? UPI பின்னை அமைக்க இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி, டெபிட் கார்டைப் பயன்படுத்தி UPI பின்னை உருவாக்கும்போது கார்டு எண், காலாவதி தேதி, கணக்கு வைத்திருப்பவரின் பெயர் போன்ற பல விவரங்களை வழங்க வேண்டும்.. 2-வது வழி ஆதார் OTP-ஐப் பயன்படுத்தி டெபிட் கார்டு இல்லாமல் UPI பின்னை அமைக்கலாம்.
முதலில் உங்கள் மொபைல் எண் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும். உங்கள் மொபைல் எண் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
டெபிட் கார்டு இல்லாமல் UPI பின்னை எப்படி அமைப்பது?
உங்கள் ஆதாரைப் பயன்படுத்தி UPI பின்னை அமைக்க, இந்த எளிய வழிமுறைகள் இங்கே.
- உங்கள் UPI செயலியைத் திறந்து, உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிடவும்.
- UPI பின் அமைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
- 'ஆதார்' என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் அனுமதியை வழங்கவும்.
- உங்கள் ஆதார் எண்ணின் முதல் 6 இலக்கங்களை உள்ளிடவும்.
- உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை உள்ளிடவும்.
- புதிய UPI பின்னை உருவாக்கும் பட்டனை கிளிக் செய்யவும்.
- அமைப்பை முடிக்க OTP மற்றும் உங்கள் UPI பின்னை மீண்டும் உள்ளிடவும்.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் டெபிட் கார்டு இல்லாமல் உங்கள் UPI பின்னை அமைக்க முடியும். அதன்பின்னர் நீங்கள் தடையற்ற UPI பரிவர்த்தனைகளை எளிதாகச் செய்யலாம். இந்த வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் UPI பின்னை விரைவாக அமைத்து உங்கள் மொபைல் எண், ஆதாரைப் பயன்படுத்தி பணமில்லா பரிவர்த்தனைகளை எளிதாக செய்ய முடியும்.