குளிர்காலத்தில் அடிக்கடி நோய் பாதிக்குதா.? இதையெல்லாம் பண்ணுங்க போதும்...
குளிர்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் எளிதில் நோய் பாதிப்பு ஏற்படும். இவற்றைத் தவிர்க்க நம் உணவிலும், அன்றாட வாழ்விலும் ஒரு சில மாற்றங்களை செய்து கொண்டால் எளிதில் நோய் பாதிக்காது.
1. நன்கு கொதிக்க வைத்து ஆறிய குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். குளிக்கும்போதும் அதிக குளிர்ந்த நீரில் குளிக்காமல் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
2. காலை மற்றும் இரவு எளிதில் ஜீரணம் ஆகும் உணவு பொருட்களை உண்டு வந்தால் செரிமான கோளாறு ஏற்படாது. மதிய வேலைகளில் சாப்பாடு சூடானதாக சாப்பிட்டால் நோய்க்கிருமிகள் பாதிக்காது.
3. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும். உணவில் காரத்திற்கு பதிலாக மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். பட்டை, கிராம்பு, லவங்கம், இஞ்சி போன்ற மசாலாக்கள் நிறைந்த டீயை குடிப்பதன் மூலம் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொல்லைகள் இருக்காது.
4. குளிர் காலங்களில் நிலவேம்பு குடிநீர் வீட்டில் இருப்பது நல்லது. இந்த கஷாயத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் குடித்து வரலாம்.
5. குளிர்காலத்தில் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் குழந்தைகள் வெறும் தரையில் கண்டிப்பாக படுக்கக் கூடாது.
6. இருசக்கர வாகனத்தில் செல்லும்போது குழந்தைகளை சாலை தெரியும்படி உட்கார வைக்கக் கூடாது. மேலும் குளிர்ந்த காற்று குழந்தைகளின் காது மற்றும் மூக்கில் படாமல் மூடியபடி வைத்திருக்க வேண்டும்.
7. இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் அடிப்பது, தோலில் அலர்ஜி போல் தோன்றுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.