ஊட்டிக்கு செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
ஊட்டிக்கு செல்ல மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியான நிலையில், இன்று முதல் இ-பாஸ்க்கு முன்பதிவு செய்யலாம்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் ஏராளமான பொதுமக்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில் பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானலுக்கு படையெடுக்கின்றனர். இதனால் ஊட்டி, கொடைக்கானல் சாலைகளில் கடந்த சில நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான மக்கள் வருகையால் கொரோனா காலத்தை போல் இ-பாஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மே 7ம் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து இ-பாஸ் முறையை கொண்டு வருவதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வந்தது. இந்நிலையில் ஊட்டி செல்ல epass.tnega.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இன்று முதல் இந்த இணையதள முகவரி மூலம் இ-பாஸ்க்கு முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கும் முறை: இ-பாஸ்க்கு விண்ணப்பம் செய்யும்போது ஆர்டர் ஜெனரேட் ஆகும். அதில் ஒரு க்யூஆர் கோட் இருக்கும். அந்த க்யூஆர் கோட்டை சோதனையில் இருக்கும் அதிகாரிகள் பரிசோதித்து வேலிடா? இல்லையா? என்பதை பார்த்து வாகனங்களை அனுமதிப்பார்கள். இந்த இ-பாஸ் நடைமுறை என்பது ரொம்ப ஈஸியானது. யாராவது வெளிநாடுகளில் இருந்து வந்தால் அவர்கள் இ-மெயில் விபரத்தையும், நம் நாட்டில் உள்ளவர்கள் செல்போன் எண் விபரத்தையும் பயன்படுத்தி தங்களின் சுயவிபரங்களை பதிவிட்டால் போதும். எங்கிருந்து வருகிறோம் என்பதையும், எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை ஊட்டியில் இருப்பார்கள், எந்த இடத்தில் தங்க உள்ளனர் என்பதை குறிப்பிட வேண்டும். மேலும் பயணிக்கும் வாகனம் காரா, பஸ்ஸா, வேனா என்பதையும், வாகனத்தில் எத்தனை பேர் பயணம் செய்ய உள்ளனர்கள் என்பதையும் குறிப்பிட்டால் போதும் இ-பாஸ் ஜெனரேட் ஆகிவிடும். ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும். இந்த இ-பாஸ் நடைமுறையில் எத்தனை பேர் என்பது கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வாகனங்களுக்கான இ-பாஸ் பதிவு நடைமுறை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்பட உள்ளது. ஒவ்வொரு வாகனங்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படும்.
மேலும் ஊட்டிக்கு வருபவர்கள் இ-பாஸை நீட்டிப்பு செய்து கொள்ளவும் வாய்ப்புள்ளது. மாறாக பேருந்தில் வருபவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. அதேபோல் நீலகிரி பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. மேலும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஊட்டியில் வசிக்கலாம். அவர்கள் வேறு பதிவெண் கொண்ட வாகனங்களை ஊட்டியில் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: “சிறைக்குச் செல்ல நான் தயார்.. ஆனால்!!” – இயக்குநர் அமீர் ஆவேசம்!