"தோல்வியிலிருந்து மீளத் தோள் கொடுப்போம்!" தேர்வு முடிவுகளை எதிர்கொள்வது எப்படி?
12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பு முனையாகும். பொறியியல் நிபுணராக வேண்டும், மருத்துவராக வேண்டும், விஞ்ஞானி ஆக வேண்டும், பேராசியர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் இருக்கும். அவர்கள் விரும்புவதை அடைய அவர்கள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும்.
வெற்றியாளர்கள், முதன்மையாளர்கள் என்ற பெருமிதங்கள் இடம்பிடிக்கும் செய்தி தாள்களில் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்தற்காக அரும்பும் முன்னரே வாழ்க்கையை முடித்துக்கொண்ட சில மாணவர்களையும் பார்க்க நேரும் அவலமும், வருடாவருடம் தொடரவே செய்கிறது. இதற்கு காரணம் என்னவென வினவினால் பல காரணங்கள் இருக்கிறது. டாப்பர் லிஸ்டில் இல்லை, கட் ஆஃப் போதாது, உறவினர் வீட்டு பையனை விட குறைந்த மதிப்பெண் உள்ளிட்ட பல காரணங்கள் மாணவர்கள் தவறான முடிவு எடுக்க காரணமாக உள்ளன.
நமது குழந்தைகள் எந்தப் புள்ளியில் இந்த முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்? இந்த நேரத்தில் அவர்களை அரவணைக்கப் பெற்றோரும் குடும்பத்தினரும் என்ன செய்ய வேண்டும்? இந்த நேரத்தில் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் எப்படி இதை எதிர்கொள்ள வேண்டும்? என்பதை அறிந்துகொள்வது இந்த நேரத்தில் கட்டாயம்.
பெற்றோரின் அதீத எதிர்பார்ப்பே, மாணவர்களின் மன அழுத்தத்திற்கு முதல் காரணம் ஆகும். குழந்தை வளர்ப்பிலும் வியாபாரத்தைப் போல முதலீட்டைப் போட்டுவிட்டு லாபத்தை எதிர்பார்க்கும் போக்கைக் குறைத்தாலே பாதி விஷயங்கள் சரியாகிவிடும். சமூக அந்தஸ்து என்ற பெயரில் பக்கத்து வீட்டில் வாங்கப்படும் டிவி, கார் போன்ற நுகர்வுப் பொருட்களுக்கு நிகராகத் தங்கள் குழந்தைகளையும் அதிக மதிப்பெண்கள் பெறவைத்துப் பெருமையைப் பறைசாற்றிக்கொள்வதே பல பெற்றோரின் விருப்பமாக இருக்கிறது.
பெரும்பாலானவர்கள் இதை நேர்மையாக ஒப்புக்கொள்ளாமல், என் குழந்தை மீது எங்களுக்கு இல்லாத அக்கறையா என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். ஓயாது உழைத்துக் குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறை காட்டும் எங்களுடைய நியாயமான எதிர்பார்ப்பு கூடத் தவறா என்றும் சிலர் கேட்பார்கள், தவறில்லை, அதே நேரம் நெருக்கடிகளைப் பெரியவர்கள் தாங்கிக்கொண்டு, குழந்தைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதுடன் ஒதுங்கிக்கொள்வது நல்லது.
குழந்தைகளில் தனித்தன்மை, ஆர்வம், ஊக்கம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இயல்பாகத் தனக்கான படிப்பு, வேலை என உரிய துறையைத் தேர்ந்தெடுத்து முன்னே செல்ல உதவலாம். குழந்தைகள் மீது பெற்றோர் எதிர்பார்ப்புகளைத் திணிக்கும்போது, அவர்கள் சுயத்தைத் தொலைத்துக் கடமைக்குப் படிக்கவும், தேர்வெழுதவும் செய்வார்கள். தேர்வு முடிவுகள் வெளியாகி, பெற்றோர்களின் எதிர்பார்ப்பு உடைந்துபோகும்போது பிள்ளைகள் தங்களையே பணயமாக்கி வாழ்க்கையை அபத்தமாக்கும் தீர்வை எடுப்பதற்குத் துணிவார்கள்.
தேர்வு முடிவு வெளியாகும் நேரத்தில் அவர்களை இயல்பாக இருக்கவிடுங்கள். அவர்களுடன் ஆக்கபூர்வமான நேரத்தைச் செலவழியுங்கள். தேர்வு எழுதியாயிற்று. தேர்வு முடிவுகளை ஒரு படிப்பினையாகக் கொள்வதைத் தவிர, இனி நம்மால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதை மாணவர்களுக்கு உணர்த்த முயற்சி செய்ய வேண்டும்.
எதிர்பார்த்ததை விட மதிப்பெண் குறைந்து மாணவர்கள் முடங்கிவிட்டால், உடனடியாக மறுகூட்டல், மறுதிருத்தல் முறைகளைப் பயன்படுத்தச் சொல்லி, ஆசுவாசம் அளிக்கலாம். அதிகபட்சமாக அவர்கள் தோல்வியைத் தழுவியிருந்தாலும், உடனடி மறுதேர்வு குறித்துப் பேசி அடுத்த கட்டத்துக்கு அவர்களை நகர்த்தலாம். ரிசல்ட் வந்த வேகத்தில் உங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்ப்பது, மனநெருக்கடிகளை அதிகரித்துக் குழந்தைகளைத் தவறான முடிவுகளுக்குத் தள்ளும்.”
மாணவர்களின் மனம் உடைந்துப் போகும் வகையில் தேர்வு முடிவு அமைந்தால், அதனை எதிர்கொள்ள வேண்டிய நம்பிக்கையை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்று தர வேண்டும்.. அதாவது, ரிசல்ட்டுக்கு இரண்டு நாள் முன்பாகவே அவர்களை ஆக்கபூர்வமாகத் தயார்படுத்துவது நல்லது. அவர்கள் முன்னால் இருக்கும் ஏராளமான வாய்ப்புகளை உணர்த்துவது மனதை லேசாக்கும்.
தேர்வு முடிவு பாதகமாக அமைந்தால், அவர்கள் இருக்கும் இடத்தை அல்லது சூழலை மாற்றுவதும் நல்லது. ஒப்பிட்டுப் பேசுபவர்கள், குத்திக்காட்டி பேசுபவர்கள் அருகில் இருந்தால் அவர்களிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவது பெற்றோரின் பொறுப்பு. சூழல் தங்கள் கையை மீறிச் செல்வதாகப் பெற்றோர் உணர்ந்தால், உடனடியாக ஒரு நிபுணரைச் சந்தித்துக் கவுன்சலிங் பெறுவது அவசியம்.