இப்படி தேர்வு நடத்துனா எப்படி..? டிஎன்பிஎஸ்சி தேர்வுகளும்.. காத்திருக்கும் தேர்வர்களும்..!!
தமிழ்நாடு அரசில் இளநிலை உதவியாளர் தொடங்கி துணை ஆட்சியர் வரையிலான பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். லட்சக்கணக்கானவர்கள் போட்டியிடும் இத்தேர்வுகள் தொடர்பான திட்ட அறிக்கையை, டிஎன்பிஎஸ்சி ஆண்டுத்தோறும் வெளியிடுகிறது. ஆனால், திட்ட அறிக்கைக்கும் நடைமுறைக்கும் நீண்ட இடைவெளி இருப்பதாக விமர்சனங்கள் உள்ளன.
அதிலும், டிஎன்பிஎஸ்சியின் குரூப்-1, குரூப்-2, குரூப்-2 ஏ, குரூப்-4 ஆகியவற்றை முறையான கால இடைவெளி மற்றும் வரிசைப்படி நடத்தாததால், தேர்வர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். உதாரணமாக, ஒரு ஆண்டில் முதலில் குரூப்-1 தேர்வை நடத்தினால், அதற்கு முயற்சிக்கும் தேர்வர்கள், அப்பணியை பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். ஆனால், குரூப்-4, குரூப்-2 பின்னர் குரூப்-1 என மாறி மாறி வருவதால், துணை ஆட்சியர் இலக்குடன் படிப்பவர்களும் குரூப்-4 தேர்வை எழுதி தேர்ச்சி பெறுகின்றனர்.
இதனால் குரூப்-4 தேர்வுக்கு மட்டுமே முயற்சிப்போரின் வாய்ப்புகள் பறிக்கப்படுவதோடு, குரூப்-1 தேர்வுக்கு முயற்சிப்பவர்களுக்கும் காலம் விரயமாகிறது. மேலும், குரூப்-1, குரூப்-2, குரூப்-4 என்ற வரிசையில் தேர்வை நடத்தினால், விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு தேர்வாணையத்திற்கு போதிய நேரம் கிடைக்கும் என்று போட்டித் தேர்வு பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் கால தாமதத்தால், ஆண்டுகள் விரயமாவதுடன் போட்டித்தேர்வில் பங்கேற்கும் வயதையும் பலர் கடந்து விடுகின்றனர். ஆகையால், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி போன்று தமிழ்நாடு அரசின் டிஎன்பிஎஸ்சி தேர்வையும் குறிப்பிட்ட காலக்கெடுவில் நடத்தி முடிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு தேர்வர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.