புதுசா இடம் வாங்கி இருக்கீங்களா? பட்டா வாங்குவது ரொம்ப ஈசி!! ஆன்லைனில் பட்டா வாங்குவது எப்படி?
முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாட்சியர் அலுவகத்திற்கு அலைய வேண்டும். இப்போது அப்படி இல்லை. ஆன்லைனிலேயே பட்டா வாங்க முடியும். தமிழ்நாட்டில் ஆன்லைனிலேயே பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
நீங்கள் வீடு, நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல் உடனே கையோடு பட்டா வாங்குவதும் மிக முக்கியமான விஷயம் ஆகும். பத்திரம் என்பது இவருடைய நிலத்தை இவர் வாங்கி இருக்கிறார் என்பதை குறிக்கும். அதேநேரம் அந்த நிலத்தின் உரிமையை சுட்டிக்காட்டுவதற்கு வருவாய்துறை வழங்கும் ஆவணமான பட்டா தான் முக்கியம். பட்டாவில் தான் அந்த நிலத்தின் அல்லது அந்த வீட்டின் உரிமையாளரின் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி குறித்த விவரங்கள் இடம் பெற்றிருக்கும். பத்திரம் பதிவதை போல பட்டாவும் மிகவும் முக்கியமான ஆவணம் ஆகும்.
ஆன்லைனில் பட்டா வாங்குவது எப்படி :
பட்டா- பெயர் மாற்றம் அல்லது புதிய பட்டா வாங்குவதற்க நீங்கள் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
பட்டா மாறுதல் விண்ணப்பிக்க அதில் (Apply Patta transfer) என உள்ள ஐகான்/லிங்கை க்ளிக் செய்ய வேண்டும். அது https://tamilnilam.tn.gov.in/citizen/ தளத்திற்கு போகும்.
அதில் நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். அந்த எண்ணுக்கு எஸ்எம்ஸ் மூலம் ஓடிபி வரும். அதை கொடுத்து லாக்-இன் செய்ய வேண்டும். அதில் பயனர் பெயர், பெற்றோர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, பாலினம், முகவரி உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்க வேண்டும். இது விண்ணப்பதாரரின் விவரமாக எடுத்துக் கொள்ளும்.
அதன் பின்னர் நீங்கள் வாங்கிய நிலம் அல்லது வீடு எந்த மாவட்டம், வட்டம், கிராமம், சார்பதிவாளர் அலுவலகம், ஆவணம் பதிவு செய்யப்பட்ட தேதி (சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்ட நாள்), ஆவணப் பதிவு எண், புல எண், உட்பிரிவு எண் போன்றவற்றை நில விவரங்களாக நீங்கள் வரிசையாக கொடுக்க வேண்டும்.
பின்னர், தானப்பத்திரம், கிரையப் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம் போன்ற ஏதாவது ஒரு சொத்து பத்திரம், விண்ணப்பதாரரின் அடையாள சான்று (ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம்), குடியிருப்பு சான்று போன்றவற்றை இணைப்பு விவரங்களில் தர வேண்டும் டாக்குமெண்ட் வடிவில் இதனை ஆன்லைனில் அப்லோட் செய்ய வேண்டும்.
அதன் பின்னர், விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை இணையவழியில் செலுத்த வேண்டும். யுபிஐ மூலமாகவும் கட்டணம் செலுத்தலாம். உட்பிரிவற்ற பட்டா மாற்றம் என்றால் விண்ணப்பக் கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும். உட்பிரிவுடன் பட்டா மாற்றம் என்றால் அதற்கான தொகையாக ரூ.400, விண்ணப்பக் கட்டணம் ரூ.60 சேர்த்து செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்திய பிறகு விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு, பட்டா மாறுதல் தொடர்பாக விண்ணப்பித்த தேதியை குறிப்பிட்டு அந்த விண்ணப்பத்தின் எண் உடன் சேர்த்து விண்ணப்பம் பெறப்பட்டது என்றும், அதற்கான சேவைக் கட்டணமாக பெற்றுக் கொண்ட தொகை குறித்த விவரம், பட்டா மாறுதல் மனு தொடர்பாக புல விசாரணைக்கு வருவாய்த் துறை அலுவலர்களால் (கிராம நிர்வாக அலுவலர் / நிலஅளவர்) தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ் உங்கள் மொபைலுக்கு வரும்.
அதில், குறிப்பிட்டுள்ளது போல அதற்கான பணிகளும் நடைபெறும். அதன் பின்னர், பட்டா விண்ணப்பதாரருக்கு கிடைக்கும். மேலும், விண்ணப்பத்தின் நிலையை https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற தளத்திற்கு சென்று விண்ணப்ப எண்ணை கொடுத்து பயனர்கள் அறிந்து கொள்ளலாம்.
Read more ; மனைவிகளை விருந்தினர்களுக்கு விருந்தாக்கும் வினோத கிராமம்! எங்க இருக்கு தெரியுமா?