ஒரு கிலோ வெங்காயம் விலை இவ்வளவா? கிடு கிடுவென உயரும் காய்கறி விலை.. எப்போது குறையும்.?
சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகளின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் தங்காளி மற்றும் வெங்காயத்தின் திடீர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்தனர். குறிப்பாக ஒரு கிலோ தக்காளி விலையானது கடந்த வாரம் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. வெங்காயத்தின் விலையானது 70 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனையானது. இந்த விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டன. அந்த வகையில் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கும், வெங்காயம் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில் வெளிநாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய விதிகப்பட்ட தடை நீக்கப்பட்டதால் உள்ளூர் சந்தையில் வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் வட மாநிலங்களில் வெங்காய அறுவடை காலம் முடிந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 80 முதல் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே வெளி சந்தையில் ஒரு கிலோ 120 முதல் 130 ரூபாயை எட்டியுள்ளது. இந்த வெங்காயத்தின் விலையானது இன்னும் ஒரு சில வாரங்களுக்கு இப்படியே நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது எனவே கிலோ கணக்கில் வாங்கி செல்லும் இல்லத்தரசிகள் தற்போது குறைந்த அளவிலையே வெங்காயத்தை வாங்கும் நிலை உள்ளது.
அதே வேளையில் தக்காளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே உச்சத்தில் சென்றுள்ள வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 முதல் 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.