ரஜினி இப்போது எப்படி இருக்கிறார்..? வீடு திரும்புவது எப்போது..? வெளியான பரபரப்பு தகவல்..!!
'கூலி' படப்பிடிப்பில் பங்கேற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த வாரம் சென்னை திரும்பிய நிலையில், திடீரென அப்போல்லோ மருத்துவமனையில் செப்.30ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களாக அவருக்கு உடல்நலப் பிரச்சனை இருந்து வந்த நிலையில், மருத்துவர்களின் பரிந்துரைப்படி மருந்துகளையும், சில மருத்துவப் பரிசோதனையும் எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.
மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில், ரஜினியின் இதயத்தில் இருந்து வரும் முக்கிய தமனி எனும் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனை சரி செய்ய ரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ”ரஜினிகாந்த், செப்.30ஆம் தேதி க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதயத்தில் இருந்து வெளியேறும் தமனி எனப்படும் ரத்த நாளத்தில் அவருக்கு வீக்கம் இருந்தது. இதற்கு அறுவை சிகிச்சையின்றி, டிரான்ஸ்கேத்தடர் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதயவியல் துறை மூத்த மருத்துவர் சாய் சதீஷ், ரஜினிக்கு சிகிச்சையளித்து வீக்கத்தை சரி செய்து, அங்கு ஸ்டென்ட் பொருத்தியுள்ளார். ரஜினிக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிகிச்சை குறித்து அவரது நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக விளக்கம் கொடுத்துள்ளோம்.
திட்டமிட்டபடி ரஜினிக்கு சிகிச்சை நல்லபடியாக செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவரின் உடல்நிலை சீராக உள்ளது. குணமடைந்து வருகிறார். இன்னும் ஒரு சில நார்களில் அவர் வீடு திரும்புவார்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரஜினி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல் வெளியானது.
ஆனால், அவர் நாளை வெள்ளிக்கிழமை தான் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. எனினும் இதுகுறித்து மருத்துவமனை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிகிறது. ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. இது அவரது 170-வது படமாகும். அடுத்து 171-வது படமாக கூலி உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Read More : புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..!! மீண்டும் குறையுமா..? முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்குமா..?