பாவங்களை போக்கி முக்தி அளிக்கும் வைகுண்ட ஏகாதசி எப்படி உருவானது..? இன்று ஏன் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது..?
பெருமாளுக்குரிய விரதங்களில் வைகுண்ட ஏகாதசி விரதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.. அதிக பலன் தரக்கூடிய விரதமாகவும், பெருமாளின் அருளை பெறவும் ஏற்ற விரதமாக இந்த விரதம் கருதப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்திலும் 2 ஏகாதசி விரதம் ஒரு வருடத்தில் மொத்தம் 24 அல்லது 25 ஏகாதசி விரதங்கள் வருகிறது.. ஏகாதசியில் விரதம் இருந்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே ஒவ்வொரு மாத ஏகாதசியில் விரதம் இருக்க முடியாதவர்கள் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதாசியில் விருந்தால் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இன்று வைகுண்ட ஏகாதசி விரதம். ஏகாதசி விரதம் 3 நாள் இருக்ககூடிய விரதம். ஏகாதசி விரதம் இருப்பவர்கள், தசமி திதியில் விரதத்தை தொடங்கி, ஏகாதசி திதியில் உபவாசமாக இருந்து, துவாதசி திதியில் விரதத்தை முடிக்க வேண்டும் என்பதே சரியான முறை.
வைகுண்ட ஏகாதசியான இன்று பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதசாமி கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படும். ஸ்ரீரங்கம் கோலிவலை கணக்கில் வைத்தே மற்ற கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும். சரி, வைகுண்ட ஏகாதசி எப்படி பிறந்தது, ஏன் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?
வைகுண்ட ஏகாதசி பிறந்த கதை
வைகுண்ட ஏகாதசி நாளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறப்பு என்ற நிகழ்வு மிகவும் விசேஷமாக நடைபெறும். ஆனால் ஏன் அன்றைய சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது என்பது சிலருக்கு மட்டுமே தெரியும்.
அதாவது, தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அரக்கன் மிகவும் துன்புறுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களை காக்குமாறு, பெருமாளிடம் தேவர்கள் முறையிட்டனர். அனைவரையும் காக்கும் பொருட்டு பெருமாள் முரனுடன் போரிட்டு வென்றார். பின்னர் ஓய்வெடுக்க ஒரு குகைக்குள் சென்ற பெருமாளை கொல்லும் பொருட்டு, முரன் ஒரு வாளுடன் வந்தான்.
அப்போது பெருமாளின் உடலில் இருந்து வெளிபட்ட சக்தி பெண் உருவெடுத்து முரனுடன் போரிட்டு வென்றாள். அந்த பெண்ணுக்கு ஏகாதசி என விஷ்ணு பெயரிட்டார். அன்றைய திதிக்கு ஏகாதசி திதி என்ற பெயர் வந்தது. ஏகாதசி தினத்தில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்டத்தில் இடமளிக்கப்படும் என்று திருமாள் வரம் கொடுத்தார். இதன் காரணமாகவே இந்த தினம் வைகுண்ட ஏகாதசி என சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சொர்க்க வாசல் ஏன் திறக்கப்படுகிறது?
பிரம்மனின் படைப்பு காலம் முடிந்து ஊழிக்காலம் தொடங்கியதும், அனைத்து உயிர்களும் இறைவனிடம் ஒடுங்கிவிடும். அப்படி ஊழிக்காலம் தொடங்கியதும் விஷ்ணுவின் தொப்புள் கொடியில் இருந்த தாமரையில் பிரம்மன் அடங்கினான். பிரம்மனின் அடுத்த பகல் தொடங்கிய போது, தாமரை இலையில் இருந்த தண்ணீர் பிரம்மனின் காதுக்குள் சென்றது.
பிரம்மன் விழித்த போது பிராண வாயுவை தூண்டினார். அப்போது, இரு காதுகளில் இருந்தும் தண்ணீர் வெளியே வந்தது. ஒன்று மிருதுவானதாகவும், மற்றொன்று கடினமானதாகவும் வெளிவந்து மது, கைபடர் என்ற இரு அரக்கர்களாக மாறினர்.
அப்போது பிரம்மனிடம் ஒலி வடிவில் இருந்த வேதங்களை அந்த அரக்க சகோதரர்கள் திருடி சென்றனர். அப்போது ஹயக்ரீவராக அவதரித்த விஷ்ணு வேதங்களை திரும்ப கொண்டு வந்தார். எனினும் அந்த இரு அரக்கர்களும் உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் துன்புறுத்த தொடங்கினர். இதனால் தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் விஷ்ணுவிடம் முறையிட அந்த அரக்கர்களை அடக்க புறப்பட்டார்.
அப்போது விஷ்ணுவிடம் சரணடைந்த இரு அரக்கர்களும், பெருமாள் அருகிலேயே இருக்க வேண்டும் என்ற வரத்தை பெற்றனர். இதை தொடர்ந்து மது, கைடபர் என்ற இரு அரக்க சகோதரர்களையும் வைகுண்டத்தை திறந்து தன் உலகிற்கு அழைத்து சென்றார். அதை அனுபவித்த அரக்கர்கள், தங்களுக்கு கிடைத்த பேறு உலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டிக் கொண்டனர்..
மேலும் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்கம் வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதரத்தில் வெளிவரும் போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்பவர்களும் எத்தகைய பாவம் செய்திருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்றும் அசுர சகோதாரர்கள் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி, அவர்களின் வேண்டுகோளை ஏற்ற பெருமாள் அவர்கள் கேட்ட வரத்தை அளித்தருளினார். இதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறக்கப்படும் நிகழ்வு உருவானது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் வழியாக விஷ்ணுவை தரிசனம் செய்தால் மனிதர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Read More : வைகுண்ட ஏகாதசி விரத மகிமை!. எந்த நாளில் கண் விழிக்கணும்?. மோட்சத்திற்கு வழிகாட்டும் மகாவிஷ்ணு!