"மனைவி, மகள்களை கவனிக்காத இந்த கொடூர நபரை நீதிமன்றத்திற்குள் நுழைய எப்படி அனுமதிக்க முடியும்?". உச்சநீதிமன்றம் காட்டம்!
Supreme Court: வரதட்சணை வழங்கத் தவறியதால், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொடுமைப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் யோகேஷ்வர் சாவோ. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சாவோ, தனது மனைவியிடம் வரதட்சணை வாங்கிவரும்படி கூறி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த மனைவி, கடந்த 2009 ஆம் ஆண்டு வரதட்சணைக் கொடுமை, சித்திரவதை மற்றும் தன்னையும் குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை சட்டவிரோதமாக மறுமணம் செய்ததாக குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தார்.
புகாரின் பேரில் யோகேஷ்வர் சாவுக்கு கடந்த 2015-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. 11 மாதங்கள் சிறையில் இருந்தார். மேல்முறையீடு நிலுவையில் இருந்தபோது ஏப்ரல் 2016 இல் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைத்து, இறுதியாக செப்டம்பர் 2024 இல் அவரது தண்டனையை உறுதி செய்தது. மேலும், தண்டனை காலம் ஒன்றரை ஆண்டுகளாக குறைக்கப்பட்டு, ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, சாவோ உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தனது மகள்களைப் பற்றி எந்த எண்ணமும் இல்லை என்று கூறியது
மேலும் "உங்கள் மகள்களைக் கூட நீங்கள் கவனிக்கவில்லை என்றால் நீங்கள் எப்படிப்பட்ட மனிதர்? இவ்வளவு கொடூரமான மனிதனை எங்கள் நீதிமன்றத்திற்குள் நுழைய எப்படி அனுமதிக்க முடியும்! என்று காட்டமாக பேசிய நீதிபதிகள், வீட்டில் சரஸ்வதி தேவி மற்றும் லட்சுமி தேவியை வணங்கும் நீங்கள், பின்னர் இதுபோன்ற செயல்களைச் செய்கிறீர்கள்".
ஆனால், மனைவி மகள்களை தவறாக வழிநடத்தியுள்ளீர்கள் என்றும் அவர் குழந்தைகளை பெறுவதில் மட்டுமே ஆர்வமாக இருந்துள்ளார் என்று கருத்து தெரிவித்தனர். உங்கள் மகள்கள் இந்த உலகத்திற்கு வந்ததில் என்ன தவறு செய்தார்கள்?" என்று கேள் எழுப்பிய நீதிபதிகள், விவசாய நிலத்தை தன் மகள்களுக்கு மாற்றித் தருவதாகச் சொன்னால், அதற்குச் சாதகமான உத்தரவு பிறப்பிப்போம்” என்று கூறினர். மகள்களை கவனிக்காத மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம்?" என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.