'புல்டோசர் நடவடிக்கை..' ஒருவருக்குச் சொந்தமாக வீட்டை எப்படி இடிக்க முடியும்? சரமாரியாக கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்..!!
வட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்பது சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று புல்டோசர்களுடன் சென்று உள்ளூர் அதிகாரிகள் வீடுகளை தரைமட்டம் ஆக்குவதே புல்டோசர் நீதி. இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பதியியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்த புல்டோசர் நடவடிக்கைகள் சட்டத்திற்குப் புறம்பானது என்று மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது ஹொசைன் என்பவரும், ராஜஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் என்பவரும் அளித்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் BR கவாய், KV விஸ்வநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார், கட்டடம் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டுள்ள பட்சத்தில் கிரிமினல் வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளை இடிக்க முடியும் என்று வாதாடினார். கிரிமினல் வழக்கில் தொடர்பு உள்ளது என்ற ஒரே காரணத்தை வைத்துக்கொண்டு ஒருவருக்குச் சொந்தமாக வீட்டை எப்படி இடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி கவாய், இந்த விவகாரத்தில் உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய நீதிபதி சுவாமிநாதன், இதுபோன்ற சமயங்களில் முன்கூட்டியே அவர்களுக்கு நோட்டீஸ் வழங்காமலும், அவர்கள் பதிலளிக்க நேரம் வழங்காமலும், வீடு இடிக்கப்படும்பட்சத்தில் மற்ற ஏற்பாடுகளைச் செய்துகொள்வதற்கு அவர்களுக்கு அவகாசம் வழங்காமல் வீடுகள் இடிக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். சட்டவிரோதமாக கட்டுமானங்களை இடிப்பதற்கு எதிராகத் தான் பேசவில்லை என்றும் இதுபோன்ற விஷயங்களில் ஒரு நெறிமுறை இருக்க வேண்டும் என்றே கூறுவதாகவும் சுவாமிநாதன் தெரிவித்தார்.
மேலும் இதுதொடர்பாக மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், தங்களது கட்சிக்காரர்கள் 50- 60 வருடங்களாக வசித்து வந்த பூர்வீக வீடுகள் எந்த முன்னறிவிப்புமின்றி இடிக்கப்பட்டுள்ளது. கட்சிக்காரரின் மகன் சரியில்லை என்பதற்காகவோ அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் நபர் மீது குற்றச்சாட்டு உள்ளதனாலோ அடாவடியாக எடுத்தவுடனே அவரின் வீட்டை பிடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை செப்டெம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்துவைத்தனர்.