Fox Hill கார் பந்தயம் | ஏழு உயிர்களை காவு வாங்கிய கோர விபத்து! 8 வயது சிறுமி உட்பட 7 பேர் பலி..
ஏழு உயிர்களை காவு கொண்ட தியத்தலாவை Fox Hill கார் பந்தயம் பாதுகாப்பான முறையில் நடத்தப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இலங்கையின் ஊவா மாகாணம் பதுளை மாவட்டம் தியத்தலா பகுதியில் நேற்று கார் பந்தயம் நடைபெற்றது. மலைப்பகுதியில் நடைபெற்ற இந்த கார் பந்தயத்தில் ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் கார் பந்தயத்தைக் காண திரண்டிருந்தனர். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட Fox Hill கார் ஓட்டப் பந்தயம் 5 வருடங்களின் பின்னர் இந்த வருடம் நடத்தப்பட்டது.
விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த பந்தயத்தின் போது, போட்டியில் ஈடுபட்டிருந்த கார்களில் ஒரு கார் பார்வையாளர்கள் நின்றுகொண்டிருந்த பகுதிக்குள் புகுந்து அதிவேகமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் கார் பந்தயத்தை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 21க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து சம்பவத்தை அடுத்து உடனடியாக கார் பந்தயம் நிறுத்தப்பட்டது
விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். காயம் பட்டவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையின் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஏழு உயிர்களை காவு கொண்ட தியத்தலாவை Fox Hill கார் பந்தயம் பாதுகாப்பான முறையில் நடத்தப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் தற்போது பகிரபட்டு வருகிறது.