அடேயப்பா.! பூரான் கடிக்கு இயற்கை வைத்தியங்கள் இதோ.!
வீடுகளில் பூச்சி தொல்லைகள் எப்போதுமே தவிர்க்க முடியாத ஒன்று. எறும்பு, கரப்பான் பூச்சி தவிர சில நேரங்களில் தேள் மற்றும் பூரான் போன்றவையும் தொந்தரவு தரக்கூடியதாக அமையும். இது போன்ற விஷப் பூச்சிகள் இரவில் கடித்துவிட்டால் அதற்குரிய கை வைத்திய முறைகளை தெரிந்து வைத்திருப்பது அவசியம். இதன் மூலம் முதலுதவி செய்து விஷத்தின் வீரிய தன்மையை குறைக்க முடியும். பூரானில் அதிக விஷம் இல்லை என்றாலும் அவை கடித்தால் உடல் முழுவதும் தடிப்புகள் தோன்றி அரிப்பு எடுக்கும். பூரான் கடிக்கு செய்ய வேண்டிய வீட்டு வைத்திய முறைகளை இந்த பதிவில் காணலாம்.
பூரான் கடித்துவிட்டால் உடல் முழுவதும் தடிப்பும் அரிப்பும் ஏற்படும். இதனைப் போக்குவதற்கு பனைவெல்லத்தை மென்று சாப்பிட வேண்டும். பின்னர் குப்பைமேனி இலைகள் சிறிது மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு ஆகியவற்றை விழுதாக அரைத்து உடல் முழுவதும் பூசி அரை மணி நேரம் இருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் சென்று குளித்தால் பூரான் கடியாள் ஏற்பட்ட அரிப்புகள் குணமாகும். மேலும் வெற்றிலையில் மூன்று நல்ல மிளகு வைத்து மென்று தின்ன பூரான் கடியின் விஷம் இறங்கும். மேலும் வெற்றிலை சாறில் நல்ல மிளகை ஊறவைத்து காலை மாலை இரண்டு வேளை வெந்நீருடன் சாப்பிட்டு வர வேண்டும்.
ஊமத்த வேரை நல்லெண்ணையில் ஊற வைத்து தடிப்பு உள்ள இடங்களில் தடவி வர நிவாரணம் கிடைக்கும். பூரானில் பெரிதளவு விஷம் இல்லை என்றாலும் சிலருக்கு மயக்கம் மற்றும் தலை சுற்றல் நெஞ்சு படபடப்பு போன்றவை இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. மேலும் பூரான் கடித்த இடத்தில் வலியோ வீக்கமோ எரிச்சலோ இருந்தால் அவற்றிற்கு அலர்ஜி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையில் எடுத்துக் கொள்ளலாம். சில மருத்துவர்கள் டிடி என்று அழைக்கப்படும் டெட்டனஸ் டாக்ஸைடு ஊசி போட பரிந்துரைப்பார்கள்.