’உடனே பைக்கை ஓரம் கட்டுங்கள்’..!! ’தாமதிக்காமல் இதை பண்ணுங்க’..!! உயிரே போகும் அபாயம்..!!
கோடை காலத்தில் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து அது தொடர்பான விழிப்புணர்வு பதிவை முகநூல் பக்கத்தில் மருத்துவர் பரூக் அப்துல்லா வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், நமது மாநிலத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் அதீத வெப்பத்திற்கு உள்ளாவதால் வெப்ப அயர்ச்சி மற்றும் வெப்ப வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வெப்பத்தின் காரணமாக அதீத வியர்வை வெளியேறுதல், தலை சுற்றுதல், குமட்டல், வாந்தி வருவது போல இருப்பது ஆகிய அறிகுறிகள் வெப்ப அயர்ச்சியைக் குறிக்கின்றன. உங்களது உடலின் மையப்பகுதி வெப்பம் தாங்கும் அளவை விட அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உங்களின் உடல் கொடுக்கும் சமிக்ஞை இது.
உடனே செய்ய வேண்டிவை :
* வெயில் இல்லாத நிழலான பகுதிக்கு சென்று விட வேண்டும்.
* பைக் ஓட்டிக் கொண்டிருந்தால் ஓரம் கட்டி விட வேண்டும்.
* குளிர் நீர், பழச்சாறுகள், இளநீர், மோர், தர்பூசணி ஆகியவற்றை வாங்கி அருந்த வேண்டும்.
* குளிர் நீரில் குளியல் போடலாம் அல்லது குளிர் நீரை உடல் முழுவதும் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* ஆடைகளையும் நீரால் நனைத்துவிடுவது நல்லது.
* பாதங்கள் மற்றும் கைகளை குளிர்ந்த நீரில் அமிழ்த்தி இருப்பதன் மூலம் உடலின் மையப்பகுதி வெப்பத்தை தணிக்க முடியும்.
* இந்த வெப்ப அயர்ச்சியின் அறிகுறிகளை அலட்சியம் செய்தால் வெப்ப வாதத்தில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது.
* இதனால் சிந்திக்க இயலாத பிதற்றல் நிலை, மூர்ச்சையாகிவிடுதல் போன்றவை ஏற்படும். இந்நிலையில் கவனிக்காமல் விட்டால் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இத்தகைய நிலையில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி இதுதான்.
* மூச்சு விடுவதையும் இதயம் துடிப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* இதயத்துடிப்போ மூச்சோ இல்லாத நிலையில் சிபிஆர் எனும் இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் வழங்கும் முதலுதவியை செய்ய வேண்டும்.
* மூச்சு விடுகிறார் இதயத்துடிப்பு நன்றாக இருக்கிறது என்றால் உடனே அவரை நிழலான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும்.
* அவரது ஆடைகளைக் களைந்து விட்டு, ஐஸ்கட்டி நிரப்பப்பட்ட நீரில் அவரது கழுத்துப் பகுதி வரை அமிழ்த்தி விட வேண்டும்.
* ஐஸ்கட்டி நீரில் அமிழ்த்திய ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு டிகிரி செல்சியஸ் மைய வெப்பம் குறையும். இவ்வாறு பதினைந்து நிமிடங்கள் அமிழ்த்தி வைக்கும் போது நல்ல பலன் கிடைக்கும்.
* ஐஸ்கட்டி இல்லாத நிலையில் குளிர்ந்த நீரைக்கொண்டு துணியில் நனைத்து உடல் முழுவதும் ஒத்தி எடுக்கலாம்.
* கை விசிறி கொண்டோ அல்லது மின் விசிறியைக் கொண்டோ அவர் மீது காற்று வீசுமாறு பார்த்துக் கொள்ளவும்.
* பானங்களைப் பருகும் நிலைக்கு அவர் வந்ததும் பருகுவதற்கு குளிர்ந்த நீர், பழச்சாறு, தாது உப்புகள் நிரம்பிய ஓஆர்எஸ் திரவம் போன்றவற்றைக் குடிக்கக் கொடுக்கலாம்.
* அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரத்த நாளம் வழி திரவங்கள் ஏற்றும் சிகிச்சை வழங்குவதும் பலனளிக்கும்.
* தாமதம் செய்யும் சில நிமிடங்களும் உயிரிழப்பிற்குக் காரணமாகிவிடும். அதுவே விரைந்து சிகிச்சை அளிக்கும் போது உயிரிழப்பு தவிர்க்கப்படும்.
Read More : கட்டுமான நிறுவனங்கள் வீட்டை கட்டி முடிக்க தாமதம் செய்கிறார்களா..? மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!