அச்சுறுத்தும் HMPV.. சீனாவில் அசாதாரண நிலையா..? WHO சொன்ன முக்கிய தகவல்..
கோவிட்-19 தொற்றுநோய்க்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சீனாவில் HMPV பாதிப்பு அதிகரித்துள்து. இது காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய சுவாச தொற்றாகும்.. சீனாவை தொடர்ந்து இந்தியா, மலேசியா மற்றும் ஹாங்காங்கிலும் HMPV பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது .
இந்தியாவில் சுமார் 10 பேருக்கு HMPV பாதிப்பு உறுதியாகி உள்ளது. எனினும் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. HMPV லேசானது முதல் மிதமானது வரை காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இது பொதுவாக குளிர்காலத்தில் வேகமாக பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுடனோ அல்லது அசுத்தமான மேற்பரப்புகளுடனோ நேரடி தொடர்பு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் HMPV பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO)முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து WHO வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சீனாவால் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், சமீபத்திய வாரங்களில் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளன, மேலும் பருவகால இன்ஃப்ளூயன்ஸா, ரைனோவைரஸ், RSV மற்றும் hMPV ஆகியவற்றின் கண்டறிதல்களும் அதிகரித்துள்ளன.
சீனாவில், இன்ஃப்ளூயன்ஸா என்பது தற்போது கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் உள்ளவர்களை பாதிக்கும் மிகவும் பொதுவாக கண்டறியப்பட்ட சுவாச நோய்க்கிருமியாகும். உலக சுகாதார அமைப்பு, சீன சுகாதார அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது.
பல நாடுகள் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள், பொதுவான சுவாச நோய் கிருமிகள் குறித்து வழக்கமான கண்காணிப்பை நடத்துகின்றன. தற்போது, மிதவெப்ப மண்டல வடக்கு அரைக்கோளத்தில் உள்ள சில நாடுகளில், இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய், கடுமையான சுவாச தொற்று விகிதங்கள் சமீபத்திய வாரங்களில் அதிகரித்துள்ளன.” என்று தெரிவித்துள்ளது.
மேலும் “ சமீபத்தில், சீனாவில் HMPV பாதிப்பு அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. HMPV என்பது குளிர்காலம் முதல் வசந்த காலம் வரை பல நாடுகளில் பரவும் ஒரு பொதுவான சுவாச வைரஸ் ஆகும், இருப்பினும் அனைத்து நாடுகளும் வழக்கமாக HMPV-ன் பரவல் குறித்த தரவை சோதித்து வெளியிடுவதில்லை.
சில சந்தர்ப்பங்களில் மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியாவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என்றாலும், HMPV நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் ஜலதோஷத்தைப் போன்ற லேசான மேல் சுவாச அறிகுறிகளைக் கொண்டுள்ளனர். இந்த நோயாளிகள் சில நாட்களுக்குப் பிறகு குணமடைவார்கள்," என்று WHO தெரிவித்துள்ளது.
மேலும் “ சீனாவில் தற்போது HMPV பாதிப்பால் அசாதாரண சூழல் எதுவும் ஏற்படவில்லை. HMPV பாதிப்பு தொடர்பாக அவசரகால அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு, கூட்டு கண்காணிப்பு அமைப்புகள் மூலம் உலகளாவிய, பிராந்திய மற்றும் நாடு மட்டங்களில் சுவாச நோய்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தேவைக்கேற்ப புதுப்பிப்புகளை வழங்கி வருகிறது..” என்று தெரிவித்துள்ளது.
Read More : COVID-19-ஐ போல HMPV தொற்று ஆக்ஸிஜன் அளவைக் குறைக்குமா..? யாருக்கு அதிக ஆபத்து..? நிபுனர்கள் விளக்கம்..