PANKAJ UDHAS| "அவரது இழப்பு இசை உலகில் வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது" - பாடகர் பங்கஜ் உதாஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.!
பாலிவுட் சினிமாவின் முன்னணி பாடகர்களில் ஒருவரான பங்கஜ் உதாஸ் இன்று காலை 11 மணி அளவில் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் வைத்து உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். நாம் சாஜன் மற்றும் மொஹ்ரா போன்ற திரைப்படங்களில் இவர் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார்.
பல அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரமுகர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியை பதிவு செய்திருக்கிறார். இது தொடர்பான தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ள பிரதமர் பிரபல பாடகரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பங்கஜ் உதாஸின் மறைவு இசை உலகில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகத் தளமான X வலைதளத்தில் தனது இரங்கல் செய்தியை பதிவு செய்துள்ள பிரதமர் மோடி "பங்கஜ் உதாஸ் ஜியின் இழப்புக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.அவருடைய பாடல் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவையாக இருக்கும். மேலும் அவருடைய கஜல் பாடல்கள் ஆத்மாவுடன் நேரடியாக பேசுபவை. அவர் இந்திய இசையின் தளங்கரை விளக்கமாக விளங்கியவர். அவரது மெல்லிசை பல தலைமுறைகளை கடந்தது. இந்த நேரத்தில் அவருடனான எனது உறவை நினைத்துப் பார்க்கிறேன்" என பதிவு செய்துள்ளார்.
மேலும் இது குறித்து தொடர்ந்து பதிவு செய்துள்ள பிரதமர் " அவரது மறைவு இசை உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி" என பதிவு செய்திருக்கிறார். மேலும் பாடகர் பங்கஜ் உதாஸ் மறைவிற்கு தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரது பாடல்கள் தலைமுறை தாண்டி பலரையும் ரசிக்க வைத்தவை என தெரிவித்துள்ளார்.