சிக்கலில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனர்!. பத்திர மோசடியில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்!
Hindenburg Research: பல்வேறு நிறுவனங்களை குறிவைத்து அறிக்கைகளை தயாரிப்பதில் ஹெட்ஜ் நிதிகளுடன் கூட்டுச் சேர்ந்ததற்காக ஹிண்டன்பர்க் நிறுவனர் நேட் ஆண்டர்சன் மீது பத்திர மோசடி விசாரணைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனர் நேட் ஆண்டர்சன் , கடந்த வாரம் ஷார்ட்-செல்லிங் நிறுவனத்தின் செயல்பாடுகளை மூடுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டார், அதாவது, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் பங்குச் சந்தை குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் கணக்கு வழக்கில் முறைகேடு செய்திருப்பதாகவும் பங்கு விலையை செயற்கையாக அதிகரித்திருப்பதாகவும் குற்றம்சாட்டியது. இதனால் அப்போது அதானி குழும பங்குகள் 50% வரை சரிந்தன. ஆனால் இந்த குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்தது.
இதுபோல, ஹிண்டன்பர்க் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பல முன்னணி நிறுவனங்களின் மீது குற்றச்சாட்டுகளை கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது. பங்குத் தரகு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ள இந்நிறுவனம், சுயலாபத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் நிறுவனர் நாதன் ஆண்டர்சன், தனது நிறுவன இணையதளத்தில், “நாங்கள் மேற்கொண்டு வந்த திட்டங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், நிறுவனத்தை கலைக்க முடிவு செய்துள்ளோம். எங்களுடைய கடைசி திட்டத்தையும் (போன்ஸி) முடித்துவிட்டோம். இதுகுறித்து பங்குச்சந்தை வாரியத்திடம் தெரிவித்துவிட்டோம் என கூறியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், எங்கள் நிறுவனத்தை மூடும் முடிவுக்கு பின்னால் எவ்வித அச்சுறுத்தலும் காரணம் இல்லை எனவும் ஆண்டர்சன் தெரிவித்திருந்தார். அதானி குழுமம் மட்டுமல்லாது இந்திய பங்குச் சந்தை வாரிய (செபி) தலைவர் மாதவி புரி புச் மற்றும் அவருடைய கணவர் மீதும் ஹிண்டன்பர்க் நிறுவனம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனர் நேட் ஆண்டர்சன் மீது பத்திர மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்படலாம் என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது. கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை மேற்கோள் காட்டி கனடாவை சேர்ந்த புலனாய்வு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கனடாவின் ஆன்சன் ஹெட்ஜ் நிதியத்தின் தலைவரான மோயஸ் கஸ்ஸாம், ஹிண்டன்பர்க்கின் நேட் ஆண்டர்சன் உட்பட பல்வேறு ஆதாரங்களுடன் ஆராய்ச்சியைப் பகிர்ந்து கொண்டதை ஒப்புக்கொண்டதை, ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்தியதாக புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேட் ஆண்டர்சனின் ஹிண்டன்பர்க் மற்றும் ஆன்சன் ஃபண்ட்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையே பல்வேறு பத்திர மோசடிகள் உள்ளன என்றும், இந்தக் கட்டுரையை எழுதும் நேரத்தில் 5% தகவல்களை மட்டுமே நாங்கள் மதிப்பாய்வு செய்துள்ளோம் என்றும் கனடாவைச் சேர்ந்த ஆன்லைன் புலனாய்வு செய்தி நிறுவனமான மார்க்கெட்ஃப்ராட்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. ஹிண்டன்பர்க் மற்றும் ஆன்சன் இடையேயான முழு பரிமாற்றமும் யு.எஸ். செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனில் விசாரிக்கப்படும்போது,2025 ஆம் ஆண்டில் நேட் ஆண்டர்சன் மீது பத்திர மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.