கள்ளச்சாராய வழக்கில் திமுக அரசுக்கு எச்சரிக்கை மணி அடித்த ஐகோர்ட்..!! அட்டாக் செய்த அண்ணாமலை..!!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு திமுக அரசுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், ”திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால், கள்ளக்குறிச்சியில் 68 உயிர்கள் கள்ளச்சாராயத்திற்குப் பலியான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல்துறைக்குத் தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை. மாவட்ட காவல்துறை, கள்ளச்சாராய விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால்தான், இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. கள்ளச்சாராயம் தொடர்பாக, திமுக அரசுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கள்ளச்சாராய விற்பனையையும் கண்டு கொள்ளாமல், உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் திமுக அரசு செயல்பட்டு வந்திருப்பது, நீதிமன்றத்தின் கருத்துக்கள் மூலம் தெரியவருகிறது.
திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்குக் கொட்டு வைத்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 68 உயிர்கள் பலியானதை மூடி மறைத்து, வழக்கைத் திசை திருப்ப முயன்ற அரசுக்கு வன்மையான கண்டனங்கள். மேல்முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல், சிபிஐ விசாரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கேபாலு, தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்ரீதரன், பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், சமுதாயத்தில் எந்த மாதிரியான பிரச்சனைகள், தீங்குகள் மதுவால் ஏற்படும் என்பதற்கு கள்ளக்குறிச்சி சம்பவம் ஒரு எச்சரிக்கை மணியாக உள்ளது. காவல்துறையினருக்கு தெரியாமல் கள்ளச்சாராய மரணங்கள் நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை.
காவல்துறை கண்டும் காணமாலும் இருந்துள்ளதை இச்சம்பவம் தெளிவாக்கிறது. அதேவேளையில் காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற்றது தவறு. எனவே, சிபிசிஐடி விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ வசம் வழங்க வேண்டும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தீர்ப்பு வழங்கப்பட்டது.
Read More : விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசு வேலை..!! உயரதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட உதயநிதி ஸ்டாலின்..!!