இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு தடை போட்ட ஐகோர்ட்..!! சந்தோஷத்தில் குதிக்கும் எடப்பாடி பழனிசாமி..!!
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் முடிவு காணும் வரை, அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என சூரியமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, மனுதாரரின் கோரிக்கையை 4 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இதை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட், நான்கு வாரங்களில் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்க கூடாது என முன்னாள் எம்.பி ரவீந்திரநாத் மற்றும் கே.சி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தனர்.
அதன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “கட்சியில் உறுப்பினர்களாக இல்லாத தனிப்பட்ட நபர்கள் கட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளதாகவும், இதை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று வாதிட்டார்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது என கூறி தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், எடப்பாடி பழனிசாமி மனுவுக்கு ஜனவரி 27ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.