High Court | ’அரசு ஊழியர்கள் பணியிட மாற்றத்தை தண்டனையாக கருதக் கூடாது’..!! ஐகோர்ட் கிளை கருத்து..!!
அரசு ஊழியா்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதை தண்டனையாகக் கருதக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
மதுரையைச் சோந்த ஜோசப் உயா்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக நான் ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். இந்நிலையில், என்னை சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசுப் போக்குவரத்துக்கழகத்துக்கு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தனா். எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், மூத்த ஊழியரான என்னை காரணமின்றி பணியிட மாற்றம் செய்துள்ளனா்.
மேலும், திருப்புவனம் அரசுப் போக்குவரத்துக் கழக கிளையில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே, எனக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்து மீண்டும் மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயா்நீதிமன்ற கிளை, அரசுப் பேருந்து ஓட்டுநரை இடமாற்றம் செய்த போக்குவரத்துக் கழக மேலாளரின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. இதை எதிா்த்து மனுதாரா், சென்னை உயா்நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கங்கா பூா்வாலா, நீதிபதி ஜி. இளங்கோவன் ஆகியோா் அடங்கிய அமா்வு, ”அரசு ஊழியா்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதை தண்டனையாகக் கருதக் கூடாது. இதை சேவையின் ஒரு பகுதியாகக் கருதி ஏற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து அரசு ஊழியா்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. பணிபுரியும் இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாவிட்டால், மனுதாரா் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கலாம். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்றனா்.
Read More : Deputy CM | செம ட்விஸ்ட்..!! துணை முதல்வர் பதவி கேட்கும் பாமக..!! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி..!!