இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் ஏவுகணை பிரிவு தளபதி உயிரிழப்பு..!! தாக்குதல் தொடரும் என அறிவிப்பு..!!
ஹிஸ்புல்லாக்களுடன் நடந்து வரும் சண்டையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்த நிலையில், இஸ்ரேல் அதனை திட்டவட்டமாக நிராகரித்து. மேலும், இரு தரப்பினரும் 21 நாட்களுக்கு மோதலை நிறுத்தி வைப்பதற்காக அமெரிக்காவும் பிரான்ஸும் கூட்டாக முன்வைத்த செயல்திட்டத்தையும் இஸ்ரேல் ஏற்கவில்லை.
ஆயிரக்கணக்கான பேஜா்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத் தொடா்பு சாதனங்கள், சூரிய மின்சார சாதனம் போன்ற பிற சாதனங்களில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு மூலம் லெபனானில் கடந்த 17 மற்றும் 18ஆம் தேதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த அக். 7ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் காஸா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக தங்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வரும் லெபனானின் ஹிஸ்புல்லா படையினரைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக உறுதியாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், லெபனானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் ஏவுகணை பிரிவு தளபதி முகமது உசைன் கொல்லப்பட்டார். வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் இப்ராஹிம் குபைசி, சிறப்பு அதிரடிப் படையான ‘ரத்வான்’ படை தளபதி இப்ராஹிம் அக்கீல், அதே படையைச் சோ்ந்த அகமது வாபி, பெண்கள், குழந்தைகள் உள்பட 600-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.