மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் சளி தொல்லையில் இருந்து உங்களை காத்துக் கொள்ள சில டிப்ஸ்.!
பொதுவாகவே மழை மற்றும் குளிர் காலங்களில் அனைவருக்கும் சளி, காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்ற சீசன் வியாதிகள் ஏற்படும். இவற்றால் ஒவ்வொருவரும் கடும் அவதிக்கு உள்ளாக வேண்டி வரும். இதிலிருந்து இயற்கையான முறையில் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது என பார்ப்போம்.
நம் உடலை நோய்கள் தாக்காமல் இருக்க வேண்டுமானால் அதற்கு 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக அவசியம். நல்ல தூக்கத்தின் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதன் காரணமாக சீசன் நோய்கள் நம்மை தாக்காமல் தற்காத்துக் கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு நாள் காலையிலும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தால் நமது உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
வைட்டமின் குறைபாடு உள்ளவர்களை இது போன்ற சீசன் வியாதிகள் அதிகமாக தாக்கும். எனவே நாம் உண்ணும் உணவில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களை சீசன் நோய்கள் தாக்கும் என்பதால் உணவில் அதிக அளவு வைட்டமின் டி எடுத்துக் கொள்வது அவசியம்.
தினசரி உணவில் நோய் எதிர்ப்பு சக்திகள் மற்றும் கிருமி நாசினி அதிகம் கொண்ட மஞ்சள் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் கிருமிகள் தொற்றிலிருந்து உடல் பாதுகாக்கப்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவுகிறது மழைக்காலங்களில் நமது சுற்றுப்புறங்கள் தண்ணீர் தேங்கி நிற்பதாலும் அசுத்தமாக இருப்பதாலும் கொசு போன்ற பூச்சிகள் உருவாக காரணமாகிறது. இவற்றைத் தவிர்க்க நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.