இமாச்சல பிரதேசத்தில் கனமழை... 60-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது..!
இமாச்சல பிரதேச மாநிலத்தில் செய்த கனமழையால் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு, மண்டி மற்றும் சிம்லா பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 60-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட நபர்கள் மாயமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஒரு கிராமமே மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. மேக வெடிப்புகள் மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவற்றின் வெவ்வேறு சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது, மீட்பு மற்றும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
சிம்லா, மண்டி மற்றும் குலு மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 47 பேர் காணாமல் போயுள்ளனர். இதுவரை 55 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர், 27 பேர் இன்னும் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடி உதவியாக ரூ.50,000 மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.