கனமழை எதிரொலி..!! டெல்டா மாவட்டங்களில் பேருந்துகள் இயங்காதா..? தீயாய் பரவும் தகவல்..!! உண்மை என்ன..?
டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக பேருந்துகள் நிறுத்தமா? என்பது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்திருக்கிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை எதிரொலியாக டெல்டா மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
அதில், “மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம். நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பேருந்து நிறுத்தம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. அதில், பேருந்து சேவை நிறுத்தம் என்ற தகவல் பழைய செய்தி எனவும், கடந்த 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பை தேதியை மறைத்து சிலர் பரப்புவதால் பொதுமக்கள் இதை யாரும் நம்ப வேண்டாம் என விளக்கம் அளித்துள்ளது.