உருவான காற்றழுத்த சுழற்சி...! அடுத்த 72 மணி நேரத்திற்குள் புரட்டி எடுக்க போகும் கனமழை...!
சுமத்ரா தீவுகளை ஒட்டி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த சுழற்சி அடுத்த 48 முதல் 72 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என டெல்டா வானிலை நிபுணர் ஹேமச்சந்தர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்; சுமத்ராவை ஒட்டிய தெற்கு வங்ககடல் பகுதியில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இச்சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 முதல் 72 மணி நேரத்தில் தாழ்வு பகுதியாக மாறக்கூடும். தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தற்காலிக பனிப்பொழிவு நிலவும்.
மத்திய & டெல்டா கடலோர மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வயல்களில் வடிகால்களை சீர் செய்வது, கவனைகளை அகற்றுவது போன்ற பணிகளை அடுத்த 5 - 7 நாட்களில் துரிதப்படுத்த வேண்டும். டிசம்பர் 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 5-ம் சுற்று மழை தமிழகத்தில் தீவிரமடையும், குறிப்பாக கடலோரம் நல்ல மழை பெறும். டிசம்பர் 4 வது வாரத்தில் 6-ம் சுற்று மழையும் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம்:
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.