இன்று 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை..!! மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..!!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் ஓரளவு தணிந்திருக்கிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அடுத்த 7 நாட்களை பொறுத்தவரை, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதேபோல, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. எனவே, இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்.14 மற்றும் 15ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் ஏப்.16 முதல் 18ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பை பொறுத்த அளவில், இன்று தொடங்கி 16ஆம் தேதி வரை அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்து வரும் 3 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும். இன்றும் நாளையும், அடுத்த இரண்டு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல அடுத்த 2 மணி நேரத்தில் தமிழத்தில் 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் மஞ்சர் அலர்ட் கொடுத்திருக்கிறது. அதாவது, மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் காலை 10 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் தொடர் விடுமுறை..!! மீண்டும் எப்போது தெரியுமா..?